மாணவர்களின் கல்விதான் முக்கியம் – 12 ஆண்டுகளாக விடுப்பே எடுக்காத அரசுப்பள்ளி ஆசிரியர்!

அரியலூரில் கடந்த 12 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காத அரசுப் பள்ளி ஆசிரியர், மாணவர்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறார் என சக ஆசிரியர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு தா.பழூர் அருகே உள்ள கீழ சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் என்பவர் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் முதலில் காட்டுமன்னார்குடியில் உள்ள ஓமம்புளியூர் அரசுப் பள்ளியில் பணிக்கு சேர்ந்து, அங்கிருந்து மாறுதல் பெற்று சிலால் அரசு உயர்நிலைப் பள்ளியில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். இதையடுத்து மீண்டும் பணி மாறுதல் பெற்று காரைக்குறிச்சி உயர்நிலைப் பள்ளியில் பணிக்கு சேர்ந்த நிலையில், இப்பள்ளி தற்போது மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
image
காரைக்குறிச்சி அரசுப் பள்ளியில் பணியாற்றும் கலையரசன், கடந்த 2014 ஆம் ஆண்டில் முதல் இந்த பள்ளியில் விடுப்பு எடுக்காமல் பணியாற்றி வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்… காலையில் 9 மணிக்கு பள்ளிக்கு வந்து மாணவர்களை ஒழுங்கு படுத்தி வகுப்பு துவங்குவதற்கு முன்பே அவர்களுக்கு ஏதாவது பாடம் தொடர்பாக கற்றுத் தருவது எனது வழக்கம் என்றார்.
பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் கூறுகையில், இந்த பள்ளியில் 12 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காமல் பணியாற்றி வருபவர் ஆசிரியர் கலையரசன். இவர், பல்வேறு வேலையிலும் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்து மாணவர்களை ஊக்குவித்து மாணவர்களுக்கு முன் மாதிரி ஆசிரியராக திகழ்கிறார்.
image
அரசு விடுமுறை நாட்களிலும், அரசு சார்பில் பள்ளிக்கு வரும் இலவச திட்டங்களை வாங்கி வைத்து அதை முன்னின்று மாணவர்களுக்கு பகிர்ந்து அளிப்பது முதல் அனைத்தையும் முன் நின்று செய்து முடிப்பார். இந்த பள்ளியில் ஆண்டுக்கு ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் இங்குள்ள ஆசிரியர்கள் சிறப்பான முறையில் கல்வி கற்பிப்பதே இதற்கு காரணம் என கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.