புதுடில்லி: ‘ஏர் இந்தியா’ நிறுவனம்,’ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா’ வங்கிகளில் இருந்து 18 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து, வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:’டாடா’ குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா,அதன் கடன்களுக்கான மறுநிதிக்காக, குறுகிய கால அளவிலான கடனை வங்கிகளில் பெற திட்டமிட்டுள்ளது. இந்த கடன்கள், ஓராண்டு காலத்துக்கானதாகும்.
ஏர் இந்தியாவை கையகப்படுத்தியதன் தொடர்ச்சியாக, ஏற்கனவே கடன் வாங்கி இருக்கும் நிலையில், இக்கடன் வாங்கும் ஏற்பாட்டை மேலும் ஒரு ஆண்டிற்கு தொடர,
இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
‘ஏர் ஏசியா, விஸ்தாரா’ உள்ளிட்ட அதன் பல்வேறு விமானப் பிரிவுகளை ஒன்றிணைக்கும் முயற்சியில், ஏர் இந்தியா ஈடுபட்டுள்ளது. புதிய விமானங்களில் முதலீடு, ஏற்கனவே உள்ளவற்றை புதுப்பித்தல், மற்றும் அதன் நெட்வொர்க்கை மாற்றி அமைத்தல் உள்ளிட்டவை குறித்து திட்டமிட்டு வருகிறது.
பொது மற்றும் தனியார் துறை வங்கிகளில், நீண்டகால கடன்களையும் பெற்று, மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, இந்நிறுவனம் விரும்புவதாக தெரிகிறது.
கடந்த ஆண்டு, டாடா சன்ஸ் நிறுவனம், எஸ்.பி.ஐ.,யிடம் 10 ஆயிரம் கோடி ரூபாயும், பேங்க் ஆப் பரோடாவிடம் 5 ஆயிரம் கோடி ரூபாயும் கடனாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement