ரூ.8 லட்சம் போதுமானது ஓபிசி வருமான உச்சவரம்பை உயர்த்தும் திட்டம் இல்லை: ஒன்றிய அரசு அறிவிப்பு February 7, 2023 by தினகரன் புதுடெல்லி: ஓபிசி வருமான உச்ச வரம்பை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் உறுப்பினர் டீன் குரியகோஸ் என்பவர்,’ அடுத்த நிதியாண்டு முடிவதற்குள் ஓபிசி பிரிவின்ஆண்டு வருமான வரம்பை தற்போதைய ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தும் திட்டம் ஏதேனும் உள்ளதா?’ என்று கேட்டிருந்தார். இதற்கு ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திரகுமார் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: ஓபிசி கிரீமி லேயர் அந்தஸ்தை நிர்ணயிக்க தற்போதுள்ள ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சம் போதுமானது. ஓபிசி வருமான வரம்பு 4 முறை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள வருமான வரம்பு போதுமானதாகக் கருதப்படுவதால் ஓபிசி வருமான வரம்பை திருத்துவதற்கான எந்த திட்டமும் அரசிடம் இல்லை. மேலும் வருமான வரம்பை மாற்றி அமைக்கும்படி தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத்திடம் எந்தப் பரிந்துரையையும் வரவில்லை.