விவசாயிகளை வஞ்சிக்கும் திறனற்ற திமுக அரசு – அண்ணாமலை சாடல்!

தேர்தல் வாக்குறுதியில் நெல் ஒரு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 2,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள். நிறைவேற்றினார்களா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பருவம் தவறி பெய்த மழையினால் காவிரி டெல்டா பகுதியில் அறுவடைக்காக காத்திருந்த நெல் பயிரையும் அறுவடை செய்யப்பட்டு ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய, விவசாய பெருங்குடி மக்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று வெள்ள சேதங்களையும் அறுவடை செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பதத்தையும் ஆய்வு செய்ய மத்திய அரசின் குழு நாளை தமிழகம் வரவுள்ளது.

மத்திய அரசின் நெல் கொள்முதல் ஈரப்பத வரைமுறையின்படி நெல் ஈரப்பதம் 17 சதவீதத்திற்கு கீழே இருக்கவேண்டும் என்பதாகும். ஆனால் தற்போது பெய்த கனமழையினால் ஈரப்பதம் 22 சதவீதத்திற்கு மேல் இருக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டுமென்ற விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கைக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி துணை நிற்கும்.

அதே வேலை, ஆளும் திறனற்ற
திமுக
அரசுக்கு சில கேள்விகளை முன் வைக்க கடமைபட்டுள்ளோம். ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் தமிழக நெல் விவசாயிகளுக்கு 52.02 கோடி செலவில் தார்பாய்கள் வழங்கப்படும் என்றார் திறனற்ற திமுக அரசின் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கொடுத்தார்களா 2022-23 ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் 5 கோடி ரூபாய் செலவில் 60,000 விவசாயிகளுக்கு தார்பாய்கள் வழங்கப்படும் என்று அறிவித்தனர். கொடுத்தார்களா?

36 கோடி ரூபாய் செலவில் ஆறு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு கிடங்குகள், உலர்தளங்கள் போன்ற கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும் என்று வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் தெரிவித்திருந்தார்கள். செய்தார்களா? தேர்தல் வாக்குறுதியில் நெல் ஒரு குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 2500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள். நிறைவேற்றினார்களா? தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் ஆட்சிக்கு வந்தபின்னர் கொடுத்த வாக்குறுதிகள் என எதையும் நிறைவேற்றாமல் விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது இந்த திறனற்ற திமுக அரசு.

மேலும் தற்போது இயங்கிவரும் நெல் சேமிப்பு கிடங்குகள் குறித்தும் பெருவாரியான விவசாய பெருங்குடி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. அதற்கும் இந்த அரசு எந்த வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. போதிய உலர்தளங்கள் இல்லாததால் பெருவாரியான விவசாயிகள் சாலையில் நெல்லை உலர வைப்பது இன்று வரை தொடர்ந்து வருகிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அலட்சிய போக்குடன் செயல்படும் இந்த திறனற்ற திமுக அரசு இதற்கு மேலும் தாமதிக்காமல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.