ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் எல்ஐசி சந்திப்பு வளைவு பகுதியில் எச்சரிக்கை பலகை இல்லாதது மற்றும் சென்டர் மீடியனில் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர் இல்லாததால் இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.
மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக தென்காசி, மதுரை, தேனி, திருநெல்வேலி, கொல்லம் ஆகிய நகரங்களுக்கு 24 மணி நேரமும் ஆயிரகணக்கான வாகனங்கங்கள் சென்று வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் எல்ஐசி சந்திப்பு அருகே வளைவு பகுதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சாலையின் நடுவே சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது. இந்த சென்டர் மீடியன் மிகவும் குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளைவு பகுதியில் எச்சரிக்கை பலகைகள் இல்லாததது மற்றும் சென்டர் மீடியனில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் பொறுத்தப்படாததால் இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறது.
செங்கோட்டையில் இருந்து சுண்ணாம்பு பவுடர் ஏற்றி வந்த லாரி நேற்று அதிகாலை சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன்பின் இரு ஜேசிபி இயந்திரங்களை கொண்டு லாரி அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. சென்டர் மீடியன் உயரத்தை அதிகரித்து, உரிய எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும் என நெடுஞ்சாலைதுறைக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.