Erode East By Election: ஓபிஎஸ்-ஐ அடுத்து டிடிவி தினகரன் எடுத்த அதிரடி முடிவு

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக உட்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும் சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். இன்று (செவ்வாய்க்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் என்பதால் பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதற்கிடையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர் ஏ.எம். சிவபிரசாந்த் போட்டியிடமாட்டார் என்று அந்தக் கட்சியின் பொதுச்செயலா் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

அமமுக கட்சி போட்டியிடாது
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர் ஏ.எம். சிவபிரசாந்த் கடந்த 3-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு, தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர் போட்டியிடமாட்டார் என அறிவிப்பு வெளியாகி இருப்பதால், தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதற்கு காரணம் அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குக்கர் சின்னம் கிடையாது
இதுக்குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொதுச்செயலா் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில், பொதுத் தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்க இயலாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்னும் ஓராண்டில் மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் வேறு சின்னத்தில் போட்டியிட்டால் மக்களிடையே குழப்பம் ஏற்படும். அதனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.

யார் இந்த ஏ.எம். சிவபிரசாத்?
அமமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஏ.எம். சிவபிரசாத் அமமுகவின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவார். கடந்த ஜனவரி 27 ஆம் தேதி இவர் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று அமமுக கட்சியின் பொதுச்செயலா் டிடிவி தினகரன் அறிவித்தார். மேலும் துணைப் பொதுச் செயலாளர் சண்முகவேலு தலைமையில் 50-க்கு மேற்பட்டவர்களை கொண்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

ஓபிஎஸ் ஆதரவாளர் வாபஸ்
முன்னதாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் ஆதரவாளர் செந்தில் முருகன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் தங்கள் அணியினருக்கு தான் வேட்பாளரை தேர்வு செய்ததற்கான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது எனக்கூறி ஆதரவு கடிதங்களை தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் தரப்பினர் சமர்பித்தனர். இதனையடுத்து ஓபிஎஸ் ஆதரவாளர் செந்தில் முருகன் வேட்புமனுவை வாபஸ் பெறுவார் என அறிவிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.