ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை:
திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவிலுக்குள் தைப்பூசம் அன்று, கறுப்பு நிற ‘பர்தா’ அணிந்த பெண், மூலஸ்தானம் வரை சென்று, சுவாமி தரிசனம் செய்துள்ளார்; பல்வேறு இடங்களை படம் பிடித்துள்ளார். கோவில் பணியாளர்கள் அவரை தடுக்கவில்லை; போட்டோ எடுத்தது குறித்தும் கேள்வி எழுப்பவில்லை. ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கோவிலுக்குள் சென்றதும், பர்தா அணிந்த பெண் நிற்காமல் ஓட்டம் பிடித்தார். அவர் எதற்காக வந்தார் என்பது மர்மமாக உள்ளது.
இதுபோன்ற விஷயங்களை அலட்சியமாக கையாள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்… எதையுமே விசாரித்து தெளிவு பெறுவது தான் நல்லது!
தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் நல்லசாமி அறிக்கை:
திருவள்ளுவருக்கு முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் சிலை உள்ளது. அப்பகுதியில், அவரது எழுத்தாணிக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்குமா? நாடு பெரும் கடனில் தவிக்கிறது. ஒவ்வொரு குடிமகன் மீதும், 1.5 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. இந்நிலையில், கடலுக்குள் பேனா சிலை வைப்பது அவசியம் தானா… அங்கு சிலை வைப்பது பகுத்தறிவும் இல்லை; பண்பட்ட அரசியலும் இல்லை.
‘பேனா சிலை விவகாரத்துல விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; அதை, முதல்வர் பொருட்படுத்த வேண்டாம்’னு கூட்டணியில் உள்ள, தி.மு.க., துதிபாடிகள் சொல்லி விட்டனரே… இனி, எதுவும் அவர்கள் காதில் விழப் போவதில்லை!
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேச்சு:
எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே சமூக நீதி. தமிழகத்தில் நடந்து வரும் திராவிட மாடல் ஆட்சியில், ஒரு வீட்டில் நான்கு பெண் குழந்தைகள் இருந்தாலும், அனைவருக்கும், 1,000 ரூபாய் உயர்க்கல்வி படிக்க நிதி உதவி அளித்தது சமூக நீதி. பெண்கள் படித்தால், குடும்பம் முன்னேறும் என, சொன்னது திராவிட தத்துவம்.
சேலம் உட்பட பல மாவட்டங்களில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் கோவிலுக்குள் வரக்கூடாது; அறந்தாங்கி டீக்கடையில் இரட்டை குவளை முறை; வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலப்புன்னு தீண்டாமை கொடுமைகளும், இதே திராவிட மாடல் ஆட்சியில் தான் அரங்கேறுது!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன், ஆதாரை இணைப்பதில் பெரும் குழப்பங்கள் நடந்திருப்பதாகவும், மின் இணைப்பு எண்களுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத, ஆதார் எண்கள்இணைக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன; இது, அதிர்ச்சி அளிக்கிறது. எந்த ஒரு சீர்திருத்தத்திற்கும் முறையான திட்டமிடலும், காலக்கெடுவும் தேவை. போதிய காலக்கெடு வழங்காமல், நோக்கம் என்ன என்பதை தெரிவிக்காமல், மின் இணைப்பு எண்ணுடன், ஆதாரை இணைக்கும் திட்டத்தை மக்கள் மீது திணித்ததன் விளைவே இது.
ஏற்கனவே மின் கட்டணத்தை உயர்த்திட்டாங்க… இப்ப ஆதார் எண்ணை இணைக்க வைத்து, இப்போ மானியமா வழங்கும், 100யூனிட்டையும், ‘கட்’ பண்ணிட போறாங்க என்ற பயம் தான் காரணம்!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்