சென்னை: ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்தும்படி, தமிழக தலைமைச் செயலருக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாபியா கும்பலுடன் இணைந்து: ஆந்திர மாநிலம் குப்பம் சட்டப்பேரவை தொகுதியைச் சேர்ந்த கிரானைட் மாபியாக்கள், அங்கிருந்து சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அதை கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டம் வழியாக தமிழகத்துக்கு கடத்துவதாக தகவல் வந்துள்ளது.
இந்த சட்டவிரோத கிரானைட் கடத்தல் ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் நதிமூர்- தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் வரதனபள்ளி வழியாகவும், அதேபோல் சித்தூர் மாவட்டம் ஓ.என்.கொத்தூர்- கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி வழியாகவும், சித்தூர் மாவட்டம் மோட்டிய செனு- வேலூர் மாவட்டம் பாச்சூர் வழியாகவும் கடத்தப்படுகிறது.
ஆந்திரா மற்றும் தமிழக எல்லையை ஒட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆந்திர கிரானைட் மாபியா கும்பலுடன் இணைந்து இந்த பணியில் ஈடுபடுகின்றனர். எனவே, ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் கடத்தப்படுவதைத் தடுத்துநிறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் வேலூர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்களுக்கும் இந்த கடிதத்தை சந்திரபாபு நாயுடு அனுப்பி, கிரானைட் கடத்தலைத் தடுத்து நிறுத்த விரைவாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டுள்ளார்.