ஈரோடு: ஈரோடு மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் வேட்பு மனு பரிசீலனை தொடங்கியுள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் வேட்பு மனு பரிசீலனை தொடங்கியது. காவல்துறையினரின் கடும் சோதனைக்கு பிறகு வேட்பு மனு பரிசீலனைக்கு வேட்பாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கியது. தினமும் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. கடந்த 4ம் தேதி வரை 5 நாட்களில் 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார்கள்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மனு தாக்கல் கிடையாது. 6வது நாளான நேற்று நாம் தமிழர் கட்சி உட்பட 13 பேர் வேட்பு மனுக்களை வழங்கினார்கள். இதுவரை மொத்தம் 59 பேர் மனு தாக்கல் செய்து உள்ளார்கள். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு வருகிற 10ம் தேதி கடைசி நாளாகும். எனவே அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.