புதுடெல்லி: உடன்கட்டை ஏறும் நிகழ்வை பாஜக எம்.பி. சந்திரபிரகாஷ் ஜோஷி புகழ்பாடுகிறார் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் குற்றம்சாட்டினர்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்ன்பெர்க் நிறுவனம் தொழிலதிபர் அதானி குறித்து மொத்தம் 413 பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கையை வெளியிட்டது. சுமார் 2 ஆண்டுகள் ஆய்வு செய்து இந்த ஆய்வறிக்கையை அவர்கள் தயார் செய்துள்ளனர். இதில் அதானி நிறுவனம்செயற்கையான முறையில் பங்கு விலையை ஏற்றியதாகவும் நிறுவனத்துக்கு அதிக கடன் உள்ளது தொடங்கி பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்றத்தில் போராட்டமும் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் போர்க்கொடியை உயர்த்தி வருகின்றன. குறிப்பாக இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அல்லதுஉச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்தவேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. அத்துடன் இந்த பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களையும் எதிர்க்கட்சிகள் வழங்கி உள்ளன. இந்த கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் வழக்கமான அலுவல்கள் நடைபெறாமல் தொடர்ந்து முடங்கி வருகின்றன. இது 4-வது நாளாக நேற்றும் நீடித்தது.
நேற்று குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து நடைபெற்ற தீர்மானத்தின் மீது ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி சந்திரபிரகாஷ் ஜோஷி பேசினார்.
அவர் பேசும்போது, ‘‘மேவார் ராணி பத்மாவதி, தன்னை அலாவுதீன் கில்ஜியிடமிருந்து காத்துக் கொள்ள, சித்தோர்கர் கோட்டையில் உடன்கட்டை ஏறினார். தன்னுடைய கவுரவத்தைக் காப்பாற்றவும், சித்தோர்கர் புகழைக் காக்கவும் அவர் தீக்குளித்தார்’’ என்றார்.
அப்போது இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கணவன் இறந்தபிறகு உடன்கட்டை ஏறும் சதி என்னும் கொடிய சம்பிரதாயம் நமதுநாட்டிலிருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் உடன்கட்டை ஏறும் நிகழ்ச்சி குறித்து பாஜக எம்.பி. புகழ்பாடுகிறார் என்று தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, காங்கிரஸ் எம்.பி. கே. முரளீதரன், ஏஐஎம்ஐஎம் எம்.பி. இம்தியாஸ் ஜலீல் உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர். இதனால் அவையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.
ஆனால் உடன்கட்டை குறித்து நான் புகழ்பாடவில்லை என்று சந்திரபிரகாஷ் ஜோஷி மறுத்தார். இதையடுத்து மீண்டும் அவையில் பேசி ஜோஷி, தன்னுடைய கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே ராணி பத்மாவதி தீக்குளித்தார் என்று நான் கூறினேன் என்றார்.
இதைத் தொடர்ந்தும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே மக்களவையை, சபாநாயகர் ஓம் பிர்லா நண்பகல் வரை ஒத்திவைத்தார். பகல் ஒரு மணிக்கு அவை கூடியபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் அமளி நீடிக்கவே அவையை ஓம் பிர்லா மீண்டும் ஒத்திவைத்தார்.