வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கி.மீ., சுற்றளவுக்குள் வேறு விமான நிலையங்கள் அமைக்கப்படக்கூடாது என்ற ஒப்பந்தத்தை தொடர்ந்து ஒசூர் விமான நிலையத்தை கைவிட மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில் உதான் திட்டப்படி சென்னை – ராமநாதபுரம் இடையே விமானங்கள் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பார்லிமென்டில் தி.மு.க., எம்.பி., வில்சன் எழுப்பிய கேள்விக்கு விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் விகே சிங் அளித்த பதில்: 2033க்கு முன்னர், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில்(பெங்களூரு விமான நிலையம்) இருந்து 150 கி.மீ., சுற்றளவுக்கு புதிய விமான நிலையங்களை அமைக்கவும், மேம்படுத்தவும் அனுமதி கூடாது என ஒப்பந்தம் உள்ளது. இதனால், ஒசூர் விமான நிலைய திட்டத்திற்கு அனுமதியில்லை. இந்த ஒப்பந்தத்தில் மைசூரு மற்றும் ஹசன் விமான நிலையங்களுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உதான் திட்டத்தின் கீழ் விமானங்களை இயக்கும் வகையில் சேலம், நெய்வேலி, ராமநாதபுரம், தஞ்சாவூர் மற்றும் வேலூர் விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. நெய்வேலி மற்றும் வேலூர் விமான நிலையங்களுக்கு லைசென்ஸ் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. சேலம் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. தஞ்சாவூருக்கு, இந்திய விமானப்படை நிலங்களை வழங்க உள்ளது. ராமநாதபுரம் விமான நிலையத்திற்கு மாநில அரசு , விமான நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை ஒப்படைக்க உள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement