சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய கூடுதல் நீதிபதிகளாக விக்டோரியா கவுரி உட்பட 5 பேருக்கு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதற்கிடையே, விக்டோரியா கவுரியின் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய கூடுதல் நீதிபதிகளாக எல்.சி.விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன், ஆர்.கலைமதி, கே.ஜி.திலகவதி ஆகிய 5 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
இவர்கள் 5 பேரையும் கூடுதல் நீதிபதிகளாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள நூலக அரங்கில் உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா நேற்று காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய நீதிபதிகளை வரவேற்று அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் வி.ஆர்.கமலநாதன், லா அசோசியேஷன் தலைவர் எல்.செங்குட்டுவன், பெண் வழக்கறிஞர்கள் சங்க நூலகர் வழக்கறிஞர் துளசி ஆகியோர் பேசினர்.
இந்நிகழ்வில் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் எஸ்.வைத்யநாதன், ஆர்.மகாதேவன் உள்ளிட்ட சக நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், பார் கவுன்சில் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் சங்கத்தினர், நீதித் துறை அதிகாரிகள், புதிய நீதிபதிகளின் குடும்பத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர். பி்ன்னர் புதிய நீதிபதிகளுக்கு சக நீதிபதிகள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு புதிய நீதிபதிகள் 5 பேரும் நன்றி தெரிவித்து பேசியதாவது:
நீதிபதி எல்.சி.விக்டோரியா கவுரி: கடவுளின் அருள் மற்றும் எனது பெற்றோரின் ஆசீர்வாதத்தால் பாரம்பரியமிக்க இந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யூர் என்ற குக்கிராமத்தில், சாதாரணக் குடும்பத்தில் பிறந்த என் மீது நம்பிக்கை வைத்து என்னை இப்பதவிக்கு பரிந்துரைத்த நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதி என்.கிருபாகரன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவில் லட்சக்கணக்கான ஏழைகள் பசி, பட்டினியால் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மேம்படுத்த வேண்டும் என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். அதன்படி நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரையும் ஒரே மாதிரியாகப் பாவித்து, சகோதரத்துவத்தை பேணி பாதுகாப்பேன்.
நீதிபதி பி.பி.பாலாஜி: நாணயத்தின் இருபக்கங்கள் என நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும் கூறுவர். இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. இருபக்கமாக செயல்பட்டால் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள வாய்ப்பில்லை. ஆனால் வழக்கு விசாரணையின்போது தினமும் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறோம். வழக்கறிஞர்கள் கம்ப்யூட்டரில் உள்ள இன்புட் டிவைஸ் என்றால், நீதிபதிகள் அவுட்புட் டிவைஸ். எனது தந்தை இதே நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். என்னை இப்பதவிக்கு சிபாரிசு செய்த அனைவருக்கும் நன்றி.
நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன்: அன்னை தமிழுக்கு எனது முதல் வணக்கம். நான் ஏழை விவசாயக்கூலி குடும்பத்தைச் சேர்ந்தவன். கல்வி கற்க பலர் எனக்கு உதவி செய்துள்ளனர். நான் குழந்தையாக இருக்கும்போதே எனது தந்தையை பறிகொடுத்து விட்டேன். எனது தாயார் உள்ளிட்ட குடும்பத்தினர் அவர்களின் வாழ்க்கையை தியாகம் செய்து என்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தனர். அவர்களுக்கும், என்னை நீதிபதியாக பரிந்துரை செய்த உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கும் மனப்பூர்வமான நன்றி.
நீதிபதி ஆர்.கலைமதி: மாவட்ட நீதிபதியாக பணிபுரிந்து வந்த என் மீது நம்பிக்கை வைத்து பாரம்பரியமிக்க இந்த சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமித்த அனைத்து நீதிபதிகளுக்கும், பாடம் சொல்லிக் கொடுத்த பேராசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலமைப்பு சட்டத்தின்படி எனது பணியை நேர்மையாகவும், திறமையாகவும் மேற்கொள்வேன்.
நீதிபதி கே.ஜி.திலகவதி: சென்னை உயர் நீதிமன்ற நீதி்த்துறை பதிவாளராகவும், மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றிய என்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமித்த உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், எனது குடும்பத்தினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
புதிய நீதிபதிகள் நியமனத்தின் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆகவும், பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 14 ஆகவும் உயர்ந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றங்களிலேயே சென்னை உயர் நீதிமன்றத்தில்தான் அதிக எண்ணிக்கையில் பெண் நீதிபதிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.