யமுனை விரைவு சாலையில் சுமார் 10 கி.மீ. தூரம் மனித உடலை இழுத்துக் கொண்டு காரொன்று சென்ற சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த கார் ஓட்டுநர் வீரேந்திர சிங், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஆக்ராவில் இருந்து காரில் திரும்பியுள்ளார். அப்போது அவரது காரில் அடிபட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். கார் ஓட்டுநர் இதை கவனிக்காமல் யமுனா விரைவு சாலையில் 10 கிலோ மீட்டர் தூரம் வரை இறந்தவரின் உடலை இழுத்துச் சென்றுள்ளார்.
சுங்கச்சாவடி ஒன்றில் கார் கடந்து சென்றபோது, காரின் பின்பகுதியில் ரத்த கறைகள் இருப்பதை பார்த்து சுங்கச்சாவடி ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் அந்த காரை மடக்கி, விபத்தில் சிக்கிய 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் உடலை மீட்டனர்.
காரின் அடியில் உடல் சிக்கியிருப்பது தனக்குத் தெரியாது என்றும் அடர்ந்த மூடுபனி காரணமாகத் பார்க்கும் திறன் குறைவாக இருந்ததால் அந்நபர் காரில் அடிபட்டது தெரியவில்லை என்றும் டிரைவர் வீரேந்திர சிங் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து விபத்தில் உயிரிழந்த நபரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. அவரது வயது சுமார் 35 இருக்கும் என்றும், சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.
ஜமுனா பார் பகுதியில் ரத்தக் கறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில்தான் விபத்து நிகழ்ந்திருப்பதாகவும் போலீசார் கூறுகின்றனர். இதனைத்தொடர்ந்து யமுனை விரைவுச் சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, இது விபத்துதானா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் திரிகுன் பிஷன் கூறுகையில், ”ஓட்டுனரை போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வருகிறோம். அவரது கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
டெல்லியில் கடந்த புத்தாண்டு தினத்தில் இதேபோன்று நடந்த ஒரு விபத்தில் இளம்பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது காரில் மோதி விபத்தில் சிக்கினர். அவரது உடல் சுல்தான்புரியிலிருந்து கன்ஜவாலா வரை 12 கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM