`நிர்வாண வீடியோ காலில் வா…’ – பெண்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்து மிரட்டியவர் கைது

கடந்த 2021-ம் ஆண்டு 17 வயது சிறுமி ஒருவர், ஆந்திரப்பிரதேசத்தின் ரச்சகொண்டா சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், “யாரென்றே தெரியாத ஒருவர் மார்பிங் செய்யப்பட்ட எனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டுகிறார். தவறாக சித்திரிக்கப்பட்ட படத்தை பகிராமல் இருக்க நிர்வாணமாக வீடியோ கால் செய்யக் கூறி மிரட்டுகிறார். அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

ஹேக்கர்

அதைத் தொடர்ந்து, காவல்துறை தேவையான தகவல்களை பெற்றுக்கொண்டு குற்றவாளிக்கு வலை விரித்திருக்கிறது. இதை அறிந்துக்கொண்ட குற்றவாளி, அவனின் செல்போன், சிம் கார்டு போன்றவைகளை உடைத்து ஆதாரம் இல்லாமல் தப்பிவிட்டான். ஆனாலும், இந்த வழக்கு தொடர்பாக ஒரு சிறப்பு குழு தொழில்நுட்ப ஆதாரங்களை சேகரித்து வந்தது. அதைத் தொடர்ந்து, காவல்துறை குற்றவாளியை கைது செய்திருக்கிறது. இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய ஏசிபி எஸ்வி ஹரி கிருஷ்ணா, “ஆந்திரப் பிரதேசத்தின் என்.டி.ஆர் மாவட்டத்தில் உள்ள இப்ராஹிம்பட்டினத்தைச் சேர்ந்தவன் ஜி.மனோஜ். 27 வயதான இவர் செங்கல் சூளையில் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் பொறியியல் பட்டதாரி.

ஆபாசத்துக்கு அடிமையான இவர், இன்ஸ்டாகிராமில் போலியான கணக்கை தொடங்கி, அதில் குறிப்பிட்ட சில பெண்களின் புகைப்படங்களை வைத்துக் கொண்டு, பெண்களுக்கு நட்பு கோரிக்கை கொடுப்பதும், அவர்களிடம் பெண்ணைப் போலவே பேசி நட்பாக பழகியும் வந்திருக்கிறார். இதற்கிடையில், அவர்களின் நம்பிக்கையை சம்பாதித்து இவர் உருவாக்கி வைத்திருக்கும், இணைப்பை அனுப்பி, அதன் மூலம் அந்தப் பெண்களின் இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்வார். அதில் அவர்களின் சாட் ஹிஸ்டரி, அவர்களின் புகைப்படங்களை எடுத்து மார்பிங் செய்து, அதற்கு பிறகே அவரது உண்மை முகத்தை அந்தப் பெண்களுக்கு காட்டுவார்.

காவல்துறை

மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை உன் இஸ்டாகிராமிலேயே பதிவிட்டு எல்லோருக்கும் அனுப்புவேன் என மிரட்டி, அவர்களை நிர்வாணமாக வீடியோ கால் செய்ய கட்டாயப்படுத்தியிருக்கிறார். சமீபத்தில் அதே முறையில் மற்றொரு ஹைதராபாத் சிறுமியின் கணக்கை அணுகி, அவரின் புகைப்படங்களுடன் மோசமான கருத்துக்களை அவரின் இனஸ்டாகிராமில் பதிவிட்டார். சிறுமி அவரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, ​​அவர் நிர்வாண வீடியோ அழைப்புகள் செய்ய அவரை மிரட்டியிருக்கிறார். அந்த தகவலை வைத்தே குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்திருக்கிறோம். குற்றம் சாட்டப்பட்டவர் திங்கள்கிழமை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.