நீதிபதிகளின் செயல்பாடு கண்காணிக்கப்படும்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்ட விக்டோரியா கவுரி சிறுபான்மை சமுதாய மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளதாகக் கூறி அவரை திரும்பப்பெற வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் பலர் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினர். இதேபோல் அவருக்கு ஆதரவாகவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினர்.

இந்நிலையில் விக்டோரியா கவுரியை புதிய நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டதும், இந்த நியமனத்தை எதிர்த்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விக்டோரியா கவுரி நேற்று காலை 10.35-க்கு பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டிருந்த அதேநேரம், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “விக்டோரியா கவுரி குறித்த அனைத்து விவகாரங்களையும் ஆராய்ந்தே உச்ச நீதிமன்ற கொலீஜியம் அவரை நீதிபதியாக பரிந்துரைத்துள்ளது. அதன்படி குடியரசுத் தலைவரும் அவரை நியமித்து, அவர் பதவியும் ஏற்றுக் கொண்டு விட்டார்.

நாங்களும் மாணவப் பருவத்தில் அரசியல் கட்சியுடன் தொடர்பில் இருந்தவர்கள் தான். பழைய நிகழ்வுகளையும், எதிர்காலத்தையும் தொடர்புப்படுத்தி பார்க்க முடியாது. நீதிபதியாக பதவியேற்ற பிறகு அவருடைய செயல்பாடு எப்படி உள்ளது என்று தொடர்ந்து கண்காணிக்கப்படும். அரசியல் பின்புலம் கொண்டவர்கள் நீதிபதியாக பதவியேற்ற முன்மாதிரி உள்ளது” எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.