புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேற்று மக்களவையில் அதானி குழுமத்துக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்குமான தொடர்பை சுட்டிக்காட்டி கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
அவர் பேசியதாவது: நான் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டபோது பலதரப்பட்ட மக்களிடம் பேசினேன். மக்கள் என்னிடம் அதானி பற்றி கேள்வி எழுப்பினர். ‘2014-ம் ஆண்டு 8 பில்லியன் டாலராக (ரூ.66 ஆயிரம் கோடி) இருந்த அதானியின் சொத்து மதிப்பு எப்படி 2022-ல் 140 பில்லியன் டாலராக (ரூ.11.58 லட்சம் கோடி) மாறியது. உலக பணக்காரர்கள் பட்டியலில் 609-வது இடத்தில் இருந்தவர் எப்படி 8 ஆண்டுகளில் 2-வது இடத்துக்கு முன்னேறினார். அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் இடையில் என்ன தொடர்பு’ என்று அவர்கள் கேட்டனர். பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். உடனே, எஸ்பிஐ அதானிக்கு 1 பில்லியன் டாலர் (ரூ.8,275 கோடி ) கடன் வழங்குகிறது. பிரதமர் மோடி வங்கதேசம் செல்கிறார். உடனே அந்நாட்டு அரசு அதானியுடன் 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொள்கிறது. காற்றாலை திட்டத்தை அதானிக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி இலங்கை அதிபருக்கு அழுத்தம் தந்ததாக கடந்த ஆண்டு இலங்கை மின்வாரியத் தலைவர் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
விமானத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத அதானியின் கையில் இந்தியாவின் 6 விமான நிலையங்கள் உள்ளன. மிகச் சிறப்பாக செயல்பட்டுவந்த மும்பை விமான நிலையத்தை ஜிவிகே குழுமத்திலிருந்து பறித்து அதானி குழுமத்துக்கு மத்திய அரசு வழங்கியது. பாதுகாப்புத் துறையில் அதானி குழுமத்துக்கு எந்த முன் அனுபவமும் கிடையாது. ஆனால், அத்துறையில் நான்கு ஒப்பந்தங்கள் அதானி வசம் உள்ளன.
எத்தனை முறை நீங்களும் (மோடி) அதானியும் ஒன்றாக பயணம் செய்துள்ளீர்கள், எத்தனை தடவை நீங்கள் வெளிநாடு சென்ற பிறகு அங்கு அதானி உங்களைச் சந்தித்து இருக்கிறார், நீங்கள் எந்த நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறீர்களோ அந்த நாட்டுடன் அதானிக்கு எத்தனை தொழில் ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளன? இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
அதானி எண்டர்பிரைசஸ் 14%: அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டதாக, அமெரிக் காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த மாதம் 24-ம் தேதி அறிக்கை வெளியிட்டது. அதையடுத்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென வீழத் தொடங்கியது. ஒரே வாரத்தில் 120 பில்லியன் டாலர் (ரூ.10 லட்சம் கோடி) இழப்பை அந்நிறுவனங்கள் சந்தித்தன.
பங்குகள் அடமானம்: நிலைமையை சமாளிக்க, பங்குகளை அடமானம் வைத்து வாங்கிய கடன்களில் 1.1 பில்லியன் டாலரை (ரூ.9100 கோடி) காலக்கெடுவுக்கு முன்னதாக செலுத்துவதாக அதானி குழுமம் நேற்று முன்தினம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் அதானி குழுமத்தின் சில நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. அதானி எண்டர்பிரைசஸ் 14.63%, அதானி வில்மார் 5%, அதானி போர்ட்ஸ் 1.33% என்ற அளவில் ஏற்றம் கண்டன. எனினும் அதானி பவர், அதானி கிரீன் எனர்ஜி , அதானி டோடல் கேஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்பு – 5% என்ற அளவில் சரிந்து காணப்பட்டன.