ரிசர்வ் வங்கியின் 6 உறுப்பினர்கள் கொண்ட நிதிக்கொள்கைக் குழு கடந்த 2 நாட்களாக மும்பையில் ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனையின் முடிவுகளை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று வெளியிட்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான ரெப்போ ரேட் 25 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கடனுக்கான வட்டி 6.50 சதவீதமாக உயர்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக உலகளவில் ஏற்பட்ட எதிர்பாராத நிகழ்வுகள், உலகளவிலான நிதிக்கொள்கைகளுக்கு பரிசோதனையாக அமைந்தது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல், மற்றும் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துதல் ஆகிய இரு அம்சங்களுக்கு இடையே வளரும் சந்தையைக் கொண்ட பொருளாதார நாடுகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டன. உலகப் பொருளாதாரச் சூழல் சில மாதங்களுக்கு முன்பு இருந்ததைப் போல் இப்போது மோசமாகத் தெரியவில்லை, முக்கியப் பொருளாதார நாடுகளில் வளர்ச்சி வாய்ப்புகள் மேம்பட்டுள்ளன. அதே சமயம் பணவீக்கம் இலக்கை விட அதிகமாக உள்ளது
2023-24ம் ஆண்டின் 4வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். 2023-24ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும். இதன்படி முதல் காலாண்டில் 7.8 சதவீதமாகவும், 2-வது காலாண்டில் 6.2 சதவீதமாகவும், 3வது காலாண்டில் 6 சதவீதமாகவும், 4வது காலாண்டில் 5.8 சதவீதமாகவும் இருக்கும் என்று கணிக்கிறோம் நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 6.5 சதவீதமாகவே இருக்கும். இயல்பான பருவமழை இருக்கும். சில்லறை பணவீக்கம் 2023-24ம்ஆண்டில் 5.3 சதவீதமாக ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்” என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்