வேலூர்: மாநகராட்சி, நகராட்சிகளில் குடியிருப்புக்கு சொத்து வரி செலுத்த ரேஷன் கார்டு எண்ணை புதிய மென்பொருளில் பதிவேற்ற வேண்டும் என்று என்று நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சிகளில் வரி வசூலை கொண்டே பணியாளர்களுக்கு சம்பளம், நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பாண்டுகளுக்கான நிலுவையில் உள்ள வரியை வசூலிக்கும் பணியில் உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக நீண்ட காலமாக வரி நிலுவை வைத்துள்ள வணிக நிறுவனங்கள், குடியிருப்புகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது. வரி செலுத்தாதவர்களின் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படுகிறது.
இதற்கிடையே வரியினங்கள் அனைத்தையும் ஒரே சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாக இயக்குனர், அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதுகுறித்து நகராட்சி நிர்வாக துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சி, நகராட்சிகளில் குடியிருப்பு சொத்து வரியினங்களுக்கு ரேஷன் கார்டும், வணிக பயன்பாட்டு வரியினங்களுக்காக பான் கார்டு அல்லது ஜிஎஸ்டி எண்ணை ஒரு மென்பொருளில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் நூறு சதவீதம் சொத்து வரி வசூலை நிறைவு செய்ய வேண்டும். இதனால் சனி, ஞாயிற்றுகிழமைகளிலும் வரி வசூல் மையம் செயல்பட்டு வருகிறது. யூடிஐஎஸ் என்னும் புதிய மென்பொருளில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதை தொடர்ந்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து வரியினங்களுக்கும் ஒரு எண் வழங்கப்படும். அதனை சென்னையில் இருந்து கண்காணிக்கப்பட உள்ளது. இதனால் வரி இனங்கள் செலுத்திய விவரங்கள் உடனுக்கு உடன் தெரிந்துவிடும். மேலும் எவ்வளவு பேர் வரி செலுத்தி உள்ளார்கள். வரி செலுத்தாதவர்கள் விவரங்கள் குறித்து மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி விவரங்கள் ஒரே இடத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.