போலீசில் சிக்காமல் செயின் பறிப்பில் ஈடுபடுவது எப்படி ? என்று ஒரு மாதமாக யூடியூப்பை பார்த்து பயிற்சி எடுத்து , தனியாக சென்ற பெண்ணை குறிவைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட ஹெல்மெட் கொள்ளையர்கள் தாங்கள் ஈடுபட்ட முதல் சம்பவத்திலேயே போலீசிடம் சிக்கிய சம்பவம் பூந்தமல்லியில் அரங்கேறி உள்ளது.
சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் திருவள்ளுவர் சாலை பகுதியை சேர்ந்தவர் ராதா. இவர் கடந்த மாதம் கெருகம்பாக்கத்தில் நடந்த திருமணத்திற்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இரு மர்ம நபர்கள ராதாவின் கழுத்தில் இருந்து நான்கு பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து மாங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வழக்கமாக கொள்ளை நடந்த இடத்தில் இருந்து எந்த வழியாக சென்றான் என்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போலீசார் இந்த முறை எங்கிருந்து வந்தார்கள் என்று ரிவர்ஸில் விசாரிக்க ஆரம்பித்தனர்.
சம்பவம் நடந்தது இரவு நேரம் என்பதால் அதற்கு பிந்தைய கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தால் கொள்ளையர்களின் உருவம் இரவில் சரியாக தெரியாது என்பதால் சம்பவம் நடப்பதற்கு முன்பாக அதாவது ரிவர்ஸ் முறையில்
கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
சுமார் 600 கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த நிலையில் போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் பல்வேறு பகுதிகளில் பைக்கில் சுற்றி திரிந்தது தெரியவந்தது.
கெருகம்பாக்கத்தில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட பின்னர் பல்வேறு தெருக்களின் வழியாக சென்று ஓர் இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி மீண்டும் உடைகளை மாற்றி கொண்டு மதனந்தபுரம் அருகே ஹெல்மெட்டை கழற்றிவிட்டு ஒருவர் மோட்டார் சைக்கிளிலும் மற்றொருவர் ஆட்டோவிலும் சர்வ சாதாரணமாக சென்றது கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது.
அதனை வைத்து நெற்குன்றத்தை சேர்ந்த விஜய், அவரது நண்பர் நொளம்பூரை சேர்ந்த படகோட்டி தமிழன் ஆகிய இருவரையும் கைது செய்து மோட்டார் சைக்கிளையும், பறித்த தங்க சங்கிலியையும் பறிமுதல் செய்தனர்.
இந்த செயின் பறிப்பு சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிப்பது கடும் சவாலாக இருந்ததாக தெரிவித்த போலீசார், கொள்ளையர்கள் இருவரும் போலீசில் சிக்காமல் செயின் பறிப்பில் ஈடுபடுவது எப்படி ? போலீசார் எந்த தடயங்களை வைத்து செயின் பறிப்பில் ஈடுபடுபவர்களை கைது செய்கிறார்கள் என யூடியூப்பில் பார்த்து பயிற்சி செய்து, அதன் படி போலீசாரிடம் சிக்காமல் இருக்க வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கிளம்பும்போது மதுரவாயல், திருவேற்காடு, நொளம்பூரில் உள்ள பல்வேறு தெருக்களில் ஹெல்மெட் அணிந்து கொண்டு சுற்றி வந்துள்ளனர்.
போலீசில் சிக்கி விடக்கூடாது என்று ஒரு மாதமாக திட்டம் போட்டு முதல் முறையாக ஈடுபட்ட கொள்ளை சம்பவத்திலேயே இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவித்த போலீசார் , போதைக்கு அடிமையான இருவரும் போதை வஸ்துக்கள் வாங்கும் செலவுக்காக செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். தற்போது பியூச்சரை எண்ணி சிறையில் கம்பி எண்ணியபடியே பீல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்