இடைத்தேர்தலுக்கே டர்ர்..! இனிதான் ஆட்டம்… திமுகவை வெளுத்த அண்ணாமலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை ஒட்டுமொத்த மாநிலமே உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கிறது. படை பலம், பண பலம் மற்றும் அதிகாரத்துடன் கூட்டணி கட்சி வேட்பாளரை களமிறக்கியுள்ள ஆளுங்கட்சி வெற்றி பெறுவது மட்டுமல்லாமல் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தொகுதியை கைப்பற்ற முடிவெடுத்துள்ளது.

அதற்காக, தேர்தல் களத்தில் போர் வீரர்களை போல 11 அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் அடங்கிய 31 பேர் கொண்ட குழுவை தேர்தல் பணிக்காக நிறுத்தியுள்ளது. ஒருவேளை இந்த தேர்தலில் திமுக நேரிடையாக போட்டியிட்டால் இவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்காது.
காங்கிரஸ்
அதன் சொந்த சின்னத்தில் போட்டியிடுவதாலும், நேர் எதிரே அதிமுக போட்டியிடுவதாலும், வாக்காளர்கள் ‘அதிமுகவா – காங்கிரஸா’ என்று நினைத்திவிடக்கூடாது என்பதற்காகவே ஆளுங்கட்சி மாபெரும் பணிக்குழுவை நிறுத்தியுள்ளதாகவும் சொல்கின்றனர்.

இதனை பாஜக தலைவர் அண்ணாமலை தனது பாணியில் விமர்சித்துள்ளார். சென்னை பாலவாக்கம் அருகே அவர் பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஈரோடு இடைத்தேர்தல், அதிமுக வெற்றி வாய்ப்பு மற்றும் பாஜகவின் நிலைப்பாடு குறித்து பகிர்ந்து கொண்டார்.

தான் இலங்கைக்கு செல்லவிருப்பதால் ஈரோடு கிழக்கு வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று அண்ணாமலை தெரிவித்தார். அதிமுக தனக்கு அழைப்பு விடுத்துள்ளது ஆனால், 13வது சட்ட திருத்தம் விவகாரம் தொடர்பாக இன்று இலங்கைக்கு செல்வதால் என்னால் அதில் கலந்துகொள்ள முடியாது. தனக்கு பதிலாக, பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அந்த கூட்டத்தில் கலந்துகொள்வார் என அவர் தெரிவித்தார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை, பாஜக அரசு வந்த பிறகுதான் மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு குறைந்துள்ளது என்றும் வெகு விரைவில் இந்தியா- இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

அதிமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டதற்கு, இந்த இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம். அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றுவோம். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து நானும் பிரச்சாரம் செய்வேன். அவரை வெற்றி பெற வைக்க வேண்டியது நமது கடமை. கூட்டணி தர்மத்தின்படி அதிமுக வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெறுவார் என அவர் கூறினார்.

திமுகவின் அரசியல் பணிக்குழு குறித்து அவர் பேசியபோது, திமுக கூட்டணி வேட்பாளருக்காக முதல்வர் 2 நாட்களில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். ஒரு இடைத் தேர்தலுக்கு பயந்து முதல்வர் உட்பட இத்தனை அமைச்சர்கள் களமிறங்கியுள்ளனர். ஒரு ஆளும் கட்சி இந்த அளவுக்கு இடைத்தேர்தலை பயத்துடன் எதிர்கொண்டதாக சரித்திரம் இல்லை; திமுகவிற்கு பயம் வந்துவிட்டது” என்று அண்ணாமலை கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.