திருச்சி: தமிழ்நாட்டில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா, தாளடி பயிர்கள் மழைநீரில் சாய்ந்து சேதமடைந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் விவசாயிகளுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்தார். கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய அனுமதி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஒன்றிய குழுவினர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு மேற்கொண்டனர். நேற்று 2வது நாளாக சென்னை மத்திய உணவுக்கழகத்தின் சேமிப்பு மற்றும் ஆய்வு கட்டுப்பாட்டு மைய அதிகாரி சி.யூனுஸ் தலைமையில் தொழில்நுட்ப அலுவலர்கள் பி.பிரபாகரன் (சென்னை), ஒய்.போயா (பெங்களூர்) ஆகியோர் கொண்ட குழுவினர் திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு பணியினை மேற்கொண்டனர். நீடாமங்கலம் தாலுகா ரிஷியூர், அரிச்சபுரம் அரசு கொள்முதல் நிலையங்கள், மன்னார்குடி தாலுகா துண்ட கட்டளை, திருத்துறைப்பூண்டி தாலுகா கீரகளத்தூர், திருவாரூர் தாலுகா கோமல் ஆகிய 5 அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து இயந்திரத்தை கொண்டு ஆய்வு செய்தனர்.
அரசு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சம்பா வயல்களில் ஒன்றிய குழுவினர் பார்வையிட்ட போது, அவர்களிடம் விவசாயிகள் மழையின் காரணமாக தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது. 22 சதவீதம் வரையில் நெல்லை கொள்முதல் செய்வதற்கு உடனடியாக அனுமதி வழங்குமாறு வலியுறுத்தினர். சென்னையில் இருந்து வரும் புட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா பரிசோதனை நிலையத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இதுதொடர்பான அறிக்கை ஒன்றிய அரசுக்கு அளிக்கப்பட்டு நல்ல முடிவு தெரிவிக்கப்படும் என விவசாயிகளிடம், ஒன்றிய குழுவினர் தெரிவித்தனர். தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் சாலியமங்கலம், அருள்மொழிபேட்டை நேரடி நெல்கொள்முதல் நிலையம், ஒரத்தநாடு வட்டம் பொய்யுந்தரகுடிகாடு, பாப்பநாடு நேரடி நெல்கொள்முதல் நிலையம், பட்டுக்கோட்டை வட்டம் அலிவலம், பில்லாங்குழி நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.