ஷில்லாங்: மேகாலயா சட்டப்பேரவை தேர்தல் பிப்.27ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: தனியாக வசிக்கும் தாய்மார்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு நிதி ஆண்டு தொடக்கத்திலும் தாய்மார்களின் வங்கி கணக்கில் ரூ.36 ஆயிரம் வரவு வைக்கப்படும். மாநிலத்தில் வேலையில்லா திண்டாடம் அதிகமாக உள்ளது. அதனால் இளைஞர்கள் வேலை தேடி டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்வதை தடுக்க வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். அனைத்து வளர்ச்சி நல திட்டங்கள் தொடர்பான அறிக்கைகள் அரசு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இவை உள்பட மேலும் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.