நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே கன்னிமார் நகரை சேர்ந்தவர் பாண்டி (49). விவசாயி. இவரது மகன் சதீஷ்கண்ணன் (23). கடந்த ஆண்டு இவர்களது தோட்டத்தின் அருகிலுள்ள நாச்சியப்பன் என்பவரது தோட்டத்தில் வாழைக்காய், மாங்காய்களை திருடியதாக கூறி அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். விசாரணை செய்த போலீசார் பாண்டி, சதீஷ் கண்ணன் உள்பட 3 பேர் மீது, வழக்கு பதிந்து பாண்டியை சிறையிலடைத்தனர். பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்த பாண்டி, அவரது மகன் சதீஷ் கண்ணன் சேர்ந்து நாச்சியப்பனிடம் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்து உள்ளனர். இதுகுறித்து இருதரப்பினரும் போலீசில் புகார் அளித்திருந்தனர். நேற்று முன்தினம் மாலை, அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு மதுபோதையில் வந்த பாண்டி, புகார் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போலீஸ் நிலையம் முன்பு பூச்சிமருந்தை குடித்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.