மக்கள் நம்பிக்கையை பெற்றதாக பிரதமர் மோடி எப்படி கூறுகிறார்?.. இடஒதுக்கீட்டை குறைத்துவிட்டு பாதுகாவலர் என்பதா?: மாநிலங்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா விளாசல்..!!

டெல்லி: 140 கோடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக மோடி எதன் அடிப்படையில் சொல்கிறார்? என ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்றிய பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா மக்களவையில் பேசினார். அப்போது பேசிய அவர், பழங்குடியினருக்காக ஒரு பள்ளிக்கூடம் கூட திறக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

இடஒதுக்கீட்டை குறைத்துவிட்டு பாதுகாவலர் என்பதா?:

எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி இடஒதுக்கீட்டை குறைத்துவிட்டு, அவர்களின் பாதுகாவலர்கள் எனக் கூறுவது எப்படி? இடஒதுக்கீட்டை குறைத்துவிட்டு, எதன் அடிப்படையில் அவர்களின் பாதுகாவலராக இருப்பதாக கூறுகிறார்கள்? என்று ஆ.ராசா கேள்வி எழுப்பினார். நாட்டில் இளைஞர்களுக்கு எந்தவிதமான வேலைவாய்ப்புகளும் வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு விளைபொருள் இரட்டிப்பு விலை வாக்குறுதி என்ன ஆனது எனவும் வினவினார்.

கொரோனா சூழலை ஒன்றிய அரசு முறையாக கையாளவில்லை:

கொரோனா பாதிப்பு சூழலை ஒன்றிய அரசு முறையாக கையாளவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை எந்த பாஜக அமைச்சரோ, பிரதமர் மோடியோ நேரில் சென்று பார்க்கவில்லை. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கூட முறையாக தகனம் செய்யப்படவில்லை என்று ஆ.ராசா தெரிவித்தார்.

திராவிட மாடலை ஒப்பிட்டு திமுக எம்.பி. பேச்சு:

திராவிட ஆட்சி உள்ள தமிழ்நாட்டில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் வறுமை ஒழிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என ஆ.ராசா கூறினார். குஜராத் மாடல் ஆட்சியில் அம்மாநிலத்தில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பிய அவர், திராவிட மாடலை பின்பற்றும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது என தெரிவித்தார். நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க எந்த நடவடிக்கையும் ஒன்றிய அரசு செய்யவில்லை எனவும் ஆ.ராசா குற்றம்சாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.