`முதல்வரின் தனிப்பிரிவுக்குப் பறந்த புகார்’ – லத்தேரி போலீஸார் 12 பேர் கூண்டோடு மாற்றப்பட்ட பின்னணி!

வேலூர் மாவட்டம், லத்தேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் உட்பட 12 போலீஸார் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மட்டும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். எஸ்.ஐ ரங்கநாதன் உட்பட மற்ற காவலர்கள் ஆயுதப்படை, கட்டுப்பாட்டு அறை, போக்குவரத்துப் பிரிவு என வெவ்வேறு பிரிவுகளுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி, எஸ்.பி ராஜேஸ்கண்ணன் இருவரின் இந்த அதிரடி நடவடிக்கைக் குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘லத்தேரி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த மாதம் 10-ம் தேதி, பால் வியாபாரி நாகேஷ் என்பவர் கொலைச் செய்யப்பட்டார். அந்த வழக்கில் குற்றவாளிகளை இதுநாள் வரை கண்டுபிடிக்கவில்லை.

வேலூர் எஸ்.பி ராஜேஸ்கண்ணன்

இதைத்தொடர்ந்து, கடந்த 5-ம் தேதி லத்தேரி பேருந்து நிலையத்தில் அ.தி.மு.க பிரமுகர் பாபு மற்றும் அவரின் நண்பர் சுதாகர் இருவரையும் 4 பேர் கும்பல் சுற்றிவளைத்து வெட்டினர். இந்த வழக்கிலும் குற்றவாளிகள் விரைவாக கைது செய்யப்படவில்லை. இதனைக் கண்டித்து அந்தப் பகுதி வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். அதோடு, இந்த லிமிட்டில் சட்டவிரோதச் செயல்களும் அதிகம் நடக்கிறது. மாமூல் வாங்கிக்கொண்டு, சட்டவிரோத கும்பல்களுக்கு போலீஸாரே உடந்தையாகச் செயல்படுவதாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார்ப் பறந்தது. இதையடுத்துதான் லத்தேரி போலீஸார் கூண்டோடு மாற்றப்பட்டிருக்கிறார்கள்’’ என்று சொன்னதோடு, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்ட இரண்டுப் பக்க புகார் மனுவையும் நமக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த 30-01-2023 தேதியிட்ட அந்த புகார் மனுவில், ‘‘லத்தேரி இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவலர்கள் துணையுடன் ஆற்றுப் பகுதிகளில் மணல் கடத்தல் நடக்கிறது. மேலும், கஞ்சா – சாராய விற்பனை, சூதாட்டம் போன்ற சட்டவிரோதத் தொழில்களும் ஏகப்போகமாக நடக்கிறது. திருமணி பகுதி ஆற்றில் 32 மாட்டு வண்டிகள், சோழமூர் ராமாபுரம், பனஞ்சோலை ஆற்றில் 18 மாட்டு வண்டிகள், காம்ராஜ்புரத்திலுள்ள அக்கரை என்ற இடத்தில் 20 மாட்டு வண்டிகளில் மணல் கொள்ளை நடக்கிறது. மாமூல் வசூலிக்க புரோக்கர்கள் சிலரையும் இன்ஸ்பெக்டரே நியமித்திருக்கிறார். சில நேரங்களில் வெளிநபர்களிடம் பறிமுதல் செய்யப்படும் சாராயத்தை, உள்ளூர் நபர்களிடம் ஒப்படைத்து போலீஸாரே விற்பனைச் செய்ய சொல்கிறார்கள்.

டிரான்ஸ்ஃபர் லிஸ்ட்

அதேபோல, காவல் நிலையத்துக்கு புகாரளிக்கச் செல்லும் ஏழை மக்கள் அல்லது பாதிக்கப்பட்டோரிடம் மரியாதைக் குறைவாக காவலர்கள் நடந்துகொள்கிறார்கள். போதாக் குறைக்கு கட்டப்பஞ்சாயத்து செய்து வழக்கை முடிக்கிறார்கள். லத்தேரி காவல் நிலையப் பகுதியில் சட்டவிரோதச் செயல்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதற்கு இங்குப் பணிபுரியும் போலீஸாரே காரணம். இவர்கள் சட்டம் – ஒழுங்கை கவனிக்க தகுதியற்றவர்கள். இவர்களின் நோக்கம் பணத்தை கொள்ளையடிப்பது, சட்டவிரோதச் செயல்களுக்கு உடந்தையாக இருப்பது மட்டும்தான். எனவே, லத்தேரி காவல் நிலைய போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோல, குற்றவாளிகளுடன் தொடர்பிலிருக்கும் இந்த காவல் நிலையப் போலீஸாரை கைது செய்யுங்கள்’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதே புகார் மனுவை, டி.ஜி.பி அலுவலகம் தொடங்கி, காவல் துறையின் பல்வேறு கட்ட உயரதிகாரிகளுக்கும் ‘பொதுமக்கள்’ என்ற பெயரில் குறிப்பிட்டு அனுப்பியிருக்கிறார்கள். வரி வரியாக, காவலர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் எந்தெந்த குற்றவாளிகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் விரிவாகக் குறிப்பிட்டு அனுப்பியதன் விளைவே போலீஸார் கூண்டோடு மாற்றப்பட்டதற்கான காரணம் என்கிறார்கள் வேலூர் போலீஸார்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.