சோலன்: இமாசல பிரதேசத்தில் உள்ள அதானி வில்மர் நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. முறைகேடு தொடர்பாக கலால் துறை அதிரடி சோதனை நடத்தி உள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்து வருகிறது. இந்நிலையில், இமாசல பிரதேசத்தின் சிம்லா நகரில் உள்ள பர்வானு என்ற பகுதியில் அதானி வில்மர் குரூப் நிறுவனம் ஒன்று உள்ளது. இதில் மாநில கலால் மற்றும் வரி விதிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
இதுபற்றி கலால்துறை இணை இயக்குனர் ஜி.டி. தாக்குர் கூறும்போது, ‘இமாசல பிரதேச தென்மண்டல அமலாக்க பிரிவின் சிறப்பு படையினர், அதானி வில்மர் நிறுவன வளாகங்களில் சோதனை செய்து வருகின்றனர். நிறுவன கிடங்குகளில் ஆய்வு செய்யப்படுகிறது. அந்நிறுவனத்தின் ஆவணங்களும் சரிபார்க்கப்படுகின்றன. இதில், ஜி.எஸ்.டி. வரியை சரி செய்து உள்ளனர். செலுத்த வேண்டிய வரி தொகையை அவர்கள் செலுத்தவில்லை. அந்த நிறுவனம் 10 முதல் 15 சதவீத வரியை செலுத்துவது கட்டாயம். அதனை கட்டாமல் உள்ளது சந்தேகம் எழுப்பி உள்ளது. அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது’ என கூறியுள்ளார். இமாச்சலில் அதானி குழுமத்தின் 7 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.