ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசு அதிகாரிகள் எதிரியாக செயல்பட்டால், எதிர்வினையை நிச்சயமாக சந்திப்பீர்கள் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்தில், பழனிசாமி பேசியதாவது:
இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த இடைத் தேர்தல் முடிவை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றன. இந்த தேர்தல் வெற்றி, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் நமது கூட்டணியை அனைத்து இடங்களிலும் வெற்றி பெறச்செய்யும். தமிழகத்தில் ரவுடிகள், குண்டர்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது. இதுதான் திமுக அரசின் சாதனை.
இலவச வேட்டி, சேலை உற்பத்திபணியை ஈரோடு பகுதி விசைத்தறியாளர்களுக்கு திமுக அரசு கொடுக்கவில்லை. இதனால், விசைத்தறி தொழில் நலிவடைந்து, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது. யார் கட்சித் தலைமைக்கு அதிகமாக நிதி கொடுக்கிறார்களோ, அவர்கள் சிறந்த அமைச்சர் என பாராட்டப்படுகின்றனர்.
அப்படிப்பட்ட ஒரு அமைச்சர், இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்பதை தடுக்க மக்களை மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளார். இவற்றை எல்லாம் தேர்தல் அதிகாரி வேடிக்கை பார்க்கிறார். ஆட்சி மாறும்போது காட்சி மாறும். அரசு அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஜனநாயக முறைப்படி செயல்படாமல், எதிரியாக செயல்பட்டால், எதிர்வினையை நிச்சயமாக சந்திப்பீர்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ்தான் போட்டியிடுகிறது. அதற்கு 20 அமைச்சர்கள் இங்கு தேர்தல் பணியில் உள்ளனர். அவர்களது பயமே நமது வெற்றிக்கு அறிகுறி. திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில், தரமற்ற பொருட்களை வழங்கி, ரூ.500 கோடி ஊழல் செய்துள்ளனர். இவ்வாறு பேசினார்.
கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, முன்னாள் அமைச்சர்கள், கூட்டணிக் கட்சி தலைவர்களான ஜி.கே.வாசன், சி.பி.ராதாகிருஷ்ணன், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரின் படங்கள் இருந்தன.