காதலர் தினத்தில் `பசு அணைப்பு தினம்’ – கலாய்க்கும் நெட்டிசன்கள்… எதிர்க்கும் அரசியல் தலைவர்கள்!

உலகெங்கும் `காதலர் தின’மாகக் கொண்டாடப்படும் பிப்ரவரி 14 தேதியில், `பசு அணைப்பு தினம்’ கொண்டாட வேண்டும் என இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்டிருக்கும் அறிக்கை பெரும் விமர்சனங்களையும், கடுமையான எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

விலங்குகள் நல வாரிய அறிக்கை

இந்திய விலங்குகள் நல வாரியத்தின் சர்ச்சை அறிக்கை:

கால்நடை பராமரிப்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் இந்திய விலங்குகள் நலவாரியச் செயலாளர் எஸ்.கே. தத்தா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பசு நம் இந்திய கலாசாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்பது நம் அனைவருக்கும் தெரியும். பசு நம் வாழ்வாதாரத்தை நீடித்திருக்கச் செய்வதோடு, கால்நடை வளம், பல்லுயிர்மம் ஆகியவற்றையும் பிரதிபலிக்கின்றது. ஒரு தாயைப் போல, மனிதகுலத்துக்கு அனைத்து செல்வங்களையும் கொடுப்பதால் அதை `காமதேனு’ என்றும் `கோமாதா’ என்றும் அழைக்கிறோம்.

காலப்போக்கில் மேற்கத்திய கலாசாரத்தின் வளர்ச்சி காரணமாக, நம் வேத மரபுகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. மேலும், மேற்கத்திய கலாசாரத்தால், நம் கலாசாரம், பாரம்பர்யம் கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்டுவிட்டது. பசுக்களை அணைப்பதால் உணர்ச்சி பெருக்கு (emotional richness) ஏற்படுவதோடு, நமக்கு மகிழ்ச்சியும் அதிகரிக்கும். எனவே பசு பிரியர்கள் அனைவரும், பசுவின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு, வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நேர்மறை ஆற்றலுடனும் வாழ பிப்ரவரி 14-ம் தேதியை, `பசு அரவணைப்பு தின’மாகக் (Cow Hug Day) கொண்டாட வேண்டும்!” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்திய விலங்குகள் நல வாரியம்

கலாய்க்கும் நெட்டிசன்கள்:

இந்த நிலையில், இந்திய இணைய வாசிகள் இந்த அறிக்கையையும், பா.ஜ.க அரசையும் கலாய்க்கும் விதமாக மீம்ஸ், கார்ட்டூன்ஸ், வீடியோக்கள் என பதிவிட்டு வைரலாக்கிவருகின்றனர். குறிப்பாக நடிகை கஸ்தூரி, “பசு அணைப்பு நாளா? முதலில் இதை ஒரு ஃபன்னான, ஃபேக் நியூஸ் என நினைத்திருந்தேன். ஆனால், இது நிஜமா? சீரியஸ்லி…?!!!” என அதிர்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

கஸ்தூரி

அதேபோல, நடிகையும் டாக்டருமான ஷர்மிளா, “மாட்டுக்கு மட்டும் தான் கட்டிபுடி வைத்தியம் பண்ணுவாங்களா… ஏன் இந்த நாய், பூனை , கழுதை, இதெல்லாம் கட்டிப்புடிச்சா ‘emotional richness’ வராதா?!” என கேள்வி எழுப்பியதோடு, “இனம் இனத்தோடு சேரட்டும். உலக காதலர் தின நல்வாழ்த்துகள்!” என தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

இதேபோல இணையவாசிகள் பலரும், பா.ஜ.க, காவி அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் பசுக்களிடம் உதைவாங்கும் வீடியோக்களை பதிவிட்டு `Feb 14 Be like’ என தெரிவித்து வருகின்றனர். இவர்களைப்போல தமிழ்நாடு அரசியல்வாதிகள் சிலரும் கலாய்த்து தள்ளியிருக்கின்றனர்.

டி.ஆர்.பி. ராஜா

எதிர்க்கும் அரசியல்வாதிகள்:

குறிப்பாக, தி.மு.க எம்.எல்.ஏ-வான டி.ஆர்.பி. ராஜா, “சங்கிகள் வருகிறார்கள்! பசுக்களே ஜாக்கிரதை!… இந்த #CowHugDay என்பது கூட நெதர்லாந்து நாட்டிலிருந்து காப்பியடித்திருக்கிறார்கள். டச்சு மொழியில் “koe klugelen” என்று அழைக்கப்படுவதுதான் இது. எனவே #CowHugging என்பது பசுவின் மீதான உண்மையான அன்பின் வெளிப்பாடல்ல!” என பங்கமாக கலாய்த்திருக்கிறார்.

ராஜீவ் காந்தி

அதேபோல, தி.மு.க மாணவரணி தலைவரான வழக்கறிஞர் இராஜீவ் காந்தி, “காதலர் தினத்தில் பசுமாடுகளை கட்டியணையுங்கள் என்கிற ஒன்றிய பாஜக அரசின் விலங்கு நல வாரியத்தின் அறிவிப்பு மானுடத்தின் பேரன்புக்கு எதிரானது. தாங்கள் கொடூர எண்ணம் கொண்டவர் என்பதனை மீண்டும் நிரூபித்துள்ளனர். மனிதர்களை மட்டுமல்ல மாடுகளையும் இந்த சங்கிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்!” என காட்டமாகப் பதிலளித்திருக்கிறார். கூடவே,“எருமை மாடுகள் தப்பித்து விட்டன! பசுமாடுகளின் நிலை தான் பரிதாபத்திற்குரியது!!” என்றும் தெரிவித்திருக்கிறார்.

கண்டனம் தெரிவிக்கும் கம்யூனிஸ்ட் கட்சி:

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன், “பிப்ரவரி 14-ம் தேதியை மாடு அணைப்பு நாளாக கடைப்பிடிக்குமாறு அறிவித்திருப்பது அறிவார்ந்த செயல் அல்ல! அது ஒன்றிய அரசின் கால்நடைத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் வெளியாகியிருப்பது வெட்கக்கேடானது!” எனக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.

முத்தரசன்

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில், “மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பை கொண்டாடும் தினமாக, ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மனிதர்கள் பாகுபாடு இல்லாமல், வேறுபாடு காட்டாமல் சகவாழ்வு மேற்கொள்வதை வலுப்படுத்தும் நிகழ்வாகவே “காதலர் தினம்” கருதப்படுகிறது. சாதிய அடுக்குமுறை சமூகத்தை திருத்தி, மாற்றியமைக்க சாதி, மத மறுப்பு திருமணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என அறிஞர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.

“ஆதலினால் காதல் செய்வீர், ஜெகத்தீரே” என மகாகவி பாரதியார் அழைப்பு விடுத்தார். மூடப் பழக்க வழக்கங்களில் மூழ்கி கிடக்கும் மனித சமூகத்தை, அறிவியல் பாதைக்கு உயர்த்திச் செல்லும் பகுத்தறிவை ஊக்கப்படுத்த வேண்டும் என அரசியல் அமைப்பு சட்டம் வலியுறுத்துகிறது. இவைகளுக்கு எதிராக காதலர் தினத்தை இழிவு செய்யும் வகையில் இந்திய விலங்குகள் நல வாரியம் “மாடு அணைப்பு நாளாக” கடைப்பிடிக்குமாறு அறிவித்திருப்பதையும், அறிவுக்கு பொருந்தாத இந்த அறிவிப்புக்கு ஒப்புதல் அளித்த ஒன்றிய அரசின் கால்நடைத்துறை அமைச்சகத்தையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இந்திய விலங்குகள் நல வாரியம் தனது அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், இதற்கு ஒப்புதல் அளித்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்!” என தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.