நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கன்னிமாநகரைச் சேர்ந்த விவசாயி பாண்டி(50). சிறுமலை அடிவாரப் பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தை பள்ளபட்டியைச் சேர்ந்த சிலர் மிரட்டி பறிக்க முயல்வதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டி மற்றும் அவரது மகன் சதீஷ்கண்ணன் ஆகியோர் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக நிலக்கோட்டை நீதிமன்றத்தை பாண்டி அணுகினார். நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன்பின்பும் அம்மையநாயக்கனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்ய காலம் தாழ்த்தி வந்தனர்.
நேற்று முன்தினம் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்துக்கு வந்து வழக்குப் பதிவு செய்வது குறித்து பாண்டி கேட்டுள்ளார். வழக்கமான தட்டிக்கழிக்கும் பதிலையே போலீஸார் கூறியதாக தெரிகிறது. இதனால், விரக்தி அடைந்த பாண்டி, தான் கொண்டு வந்திருந்த விஷத்தை காவல் நிலையம் முன்பு குடித்து மயங்கி விழுந்தார்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.
இறந்த பின் வழக்கு பதிவு: பாண்டி உயிரிழந்த பின்பு அவர் நில அபகரிப்பு தொடர்பாக ஏற்கெனவே அளித்திருந்த புகார் தொடர்பாக பள்ளபட்டியை சேர்ந்த சங்கர், நாச்சியப்பன், சின்ன கருப்பு ஆகியோர் மீது அம்மையநாயக்கனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து பாண்டி உறவினர்கள் கூறுகையில், புகார் கொடுத்து பல மாதங்கள் காவல் நிலையத்துக்கு அலைந்து திரிந்தும், நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த பின்பும் பாண்டியின் புகார் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை.
ஒரு புகாரை பதிவு செய்ய அவர் தன் உயிரையே இழக்க வேண்டியிருந்தது. சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.