மதுரை/கோவை: மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிப்.18-ம் தேதி மதுரை வருகிறார். தொடர்ந்து கோவை ஈஷாவில் நடைபெறும் மஹா சிவராத்திரி நிகழ்விலும் அவர் பங்கேற்கிறார்.
மகா சிவராத்திரியையொட்டி பிப்.18-ம் தேதி கோவை ஈஷா யோகா மையத்தில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்கிறார். இதையொட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய அவர் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: புது டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் பிப்.18-ம் தேதி முற்பகலில் குடியரசுத் தலைவர் மதுரை வருவதாக தகவல் வந்துள்ளது. பின்னர் கார் மூலம் பகல் 12.15 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய செல்கிறார். அங்கிருந்து மீண்டும் மதுரை விமான நிலையம் வரும் அவர், கோவைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.
அங்கு ஈஷாவில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொள்கிறார்.
கோவை பூண்டி அருகேயுள்ள ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா வரும் 18-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி சிலை முன்பு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
மாலை 6 மணிக்கு ஈஷா யோகா மையத்துக்கு வரும் குடியரசுத் தலைவரை, ஈஷா நிறுவனர் சத்குரு வரவேற்கிறார். பின்னர், ஈஷா வளாகத்தில் உள்ள லிங்க பைரவி உள்ளிட்ட ஆலயங்களை அவர் பார்வையிடுகிறார். தொடர்ந்து, ஆதியோகி சிலை முன்பு நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்கிறார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் விழாவில் பங்கேற்க உள்ளதாக ஈஷா நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மஹா சிவராத்திரி விழா தொடர்பாக ஈஷா அறக்கட்டளை நேற்று வெளியிட்ட அறிக்கையில்,‘‘ஈஷா நிறுவனர் சத்குரு முன்னிலையில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழா தியானலிங்கத்தில் பஞ்சபூத ஆராதனையுடன் தொடங்குகிறது. லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, உள்நிலையில் பரவசத்தில் ஆழ்த்தும் சக்திவாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரத பாரம்பரியத்தை பறைசாற்றும் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் விழா விடிய விடிய நடைபெற உள்ளது.
மஹாசிவராத்திரி இரவில் இருக்கும் கோள்களின் அமைப்பு, மனித உடலில் இயற்கையாகவே சக்தியை மேல் நோக்கி எழ செய்வதற்கு ஏதுவாக உள்ளது. எனவே, இந்த இரவில் ஒருவர் முதுகுதண்டை நேராக வைத்திருந்து விழிப்பாகவும், விழிப்புணர்வாகவும் இருந்தால் ஆன்மிகம் சார்ந்த மகத்தான பலன்களை பெற முடியும்.
இவ்விழா ஈஷாவின் அதிகாரப்பூர்வ யூ – டியூப் சேனலான Sadhguru Tamil–ல் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும். மேலும், தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராத்தி என பல்வேறு மாநில மொழிகளில் முன்னணி தொலைக்காட்சிகள் மற்றும் யூ – டியூப் சேனல்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது’’ எனக் கூறப்பட்டுள்ளது.