புதுடெல்லி: இந்தியாவில் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட சிவிங்கிப் புலிகள் (சீட்டா), 70 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட 8 சிவிங்கிப் புலிகளை மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் 17-ம் தேதி திறந்துவிட்டார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “வனவிலங்குகள் பாதுகாப்புக்காக முழுமையான முயற்சிகளை மத்திய அரசுமேற்கொண்டுள்ளது. அரசு தற்போது ‘சீட்டா’ திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து சிவிங்கிப் புலிகளை இந்தியாவுக்கு கொண்டு வர அந்நாட்டுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் 14 முதல் 16 சிவிங்கிப் புலிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும்” என்றார்.