"அடக்கம் செய்யகூட பணமில்லை" – கணவர், தாயாரின் சடலங்களுடன் ஒரு வாரம் வசித்த தாய், மகன்!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், வண்டிப்பேட்டை, குமணன் வீதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் காலமாகி விட்ட நிலையில், இவரின் மனைவி கனகாம்பாள் (80), மகள் சாந்தி (60)யுடன் வசித்து வந்தார். சாந்தியின் கணவர் மோகனசுந்தரம் (74) இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு சரவணகுமார் (33) என்ற மகனும், சசிரேகா (35) என்ற மகளும் இருக்கின்றனர். சசிரேகாவுக்கு திருமணமாகி திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் வசித்து வருகிறார்.

சரவணகுமார் சற்று மனநலம் சரியில்லாதவர். ஏற்கெனவே சாந்தியின் கணவரான மோகனசுந்தரம் நைட் வாட்ச்மேன் பணிக்குச் சென்று வாங்கி வரும் சொற்ப சம்பளத்தில் தான், சாந்தி குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். மனநலம் சரியில்லாதவர் என்பதால் மகன் சரவணகுமாரை எந்த வேலைக்கும் அனுப்பவில்லை. அவர் வீட்டிலேயே இருந்தார்.
சாந்திக்கு வயதாகி விட்டதால், வேறு எந்த வேலைக்கும் செல்ல முடியாமல், தள்ளாத வயதிலிருந்த தாயார் கனகாம்பாளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.

சரவண குமார்

இந்த நிலையில், கணவர் மோகனசுந்தரம் ஒரு வாரத்துக்குமுன் உடல்நலம் சரியில்லாமல் இருந்து வீட்டிலேயே உயிரிழந்து விட்டார். கணவர் உயிரிழந்த நிலையில், அவரை அடக்கம் செய்வதற்கு கூட பணம் இல்லாத நிலையில், யாரிடமும் சொல்லாமலும், செய்வதறியாமலும் சாந்தி தவித்து வந்தார். கணவரின் சடலத்தை அடக்கம் செய்யாமல் வீட்டிலேயே சாந்தி வைத்திருந்திருந்தார்.  

மகளின் நிலையைப் பார்த்து அவரின் தாயார் கனகாம்பாளும் படுத்த படுக்கையாகி விட்டார். இந்த நிலையில் 2 நாள்களுக்கு முன் கனகாம்பாளும் உயிரிழந்து விட்டார். இருவரின் சடலங்களும் வீட்டில் இருந்ததால் குமணன் வீதியில் கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் அப்பகுதி மக்கள் கோபிசெட்டிபாளையம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
நிகழ்விடத்துக்கு வந்த கோபி போலீஸார் வீட்டில் சென்று பார்த்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஒருபக்கம் உயிரிழந்த நிலையில் கணவரின் உடலும், மறுபக்கம் தாயாரின் சடலத்தையும் வைத்திருந்த சாந்தியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது கதறி அழுதபடி போலீஸாரிடம் சாந்தி, “என் கணவர் மோகனசுந்தரமும், தாயார் கனகாம்பாளும் உயிரிழந்து விட்டார்கள். அவர்களை அடக்கம் செய்ய என்னிடம் பணம் இல்லை. நான் எப்படி அவர்களை அடக்கம் செய்வேன். எனக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. கணவர் உயிரிழந்து 7 நாள்களாகி விட்டது. தாயார் உயிரிழந்து 2 நாள்களாகி விட்டது” என்று கூறி கதறியிருக்கிறார்.

சாந்தியின் நிலையைக் கண்டு விக்கித்துபோன போலீஸார், உடனடியாக உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கான செலவை கோபி போலீஸாரே ஏற்றுக் கொண்டனர்.

சாந்தி

கோபி போலீஸாரிடம் நாம் கேட்டபோது, “சாந்தி கடும் மனஅழுத்தத்தில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. கிட்டத்தட்ட பிரம்மை பிடித்தவர் போல ஆகிவிட்டார். அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உறவினரின் செல்போன் எண்கள் கூட சாந்தியிடம் இருந்தது. ஆனால் அவர்களுக்கு போன் செய்யவும்  தோன்றாமல் அவர் இருந்திருக்கிறார்.

ஏற்கெனவே மகன் சரவணகுமாரும் மனநலம் சரியில்லாதவர் என்பதால் நடந்த விஷயம் எதுவும் அவருக்குத் தெரியவில்லை.
கணவர் மோகனசுந்தரத்தின் உடல் உள் அறையில் வைத்து பூட்டியிருந்ததால் அதன் துர்நாற்றம் வெளியே தெரியவில்லை. அவ்வப்போது துர்நாற்றம் வீசினாலும், பக்கத்திலேயே சாக்கடை இருந்ததால் அதன் நாற்றம் தான் என்று அப்பகுதி மக்கள் நினைத்துக் கொண்டனர். கனகாம்பாள் உயிரிழந்து 2 நாள்களாகி விட்ட நிலையில், அவரின் சடலம் முன் அறையில் இருந்ததால் வெளியே துர்நாற்றம் கடுமையாக வீசியிருக்கிறது. அதன் பிறகே எங்களுக்கு  தகவல் கிடைத்து அங்கு சென்றோம். நாங்கள் சென்றபோது சாந்திக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் தானாக புலம்பிக் கொண்டிருந்தார்.  

அவர்களது நிலையைக் கண்டு பரிதாபப்பட்டு நாங்களே சடலத்தை அங்கிருந்து பெருந்துறையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றோம். அதற்கான செலவை போலீஸார் ஏற்றுக் கொண்டோம். சாந்தியிடம் இருந்து உறவினர்களின் செல்போன் எண்களை வாங்கி அவர்களை பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரச்சொல்லி அவர்களிடம் சடலத்தை ஒப்படைத்தோம்.

அதன்படி உயிரிழந்த கனகாம்பாளின் உடன் பிறந்த தம்பிகளான தங்கவேல், ராஜேந்திரன் ஆகியோரிடம் இருவரின் சடலங்களும் ஒப்படைக்கப்பட்டு, அந்த சடலத்தை அடக்கம் செய்யும் பொறுப்பை அவர்களே ஏற்றுக் கொண்டனர்.
சாந்தியின் கணவர் மோகனசுந்தரம் கடந்த 4 மாதங்களாகவே உடல்நலம் சரியில்லாமல் சித்த மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரின் சடலம் இறுகி பதப்படுத்தப்பட்ட உடல் என்று சொல்லக்கூடிய மம்மியின் உடல் போன்று இருந்தது. அவர் காலமாகி 1 மாதமே ஆகியிருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்” என்றனர்.  
இந்த நிகழ்வு கோபிசெட்டிபாளையம் பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.