திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி அடுத்த சொக்கநாடு எஸ்டேட் பகுதியில் மளிகை கடையை காட்டு யானை நாசம் செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் சொக்கநாடு எஸ்டேட் பகுதியில் புண்ணியவேல் என்பவர் மளிகை நடத்தி வருகிறார். இந்நிலையில், நள்ளிரவில் இரண்டு குட்டி யானைகளுடன் வந்த யானை மளிகை கடையினை உடைத்து அங்கு உள்ள அரிசி, சர்க்கரை, மைதா உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு விட்டு கடையை நாசம் செய்து விட்டு சென்றது.
யானை கடையின் கதவை உடைத்து அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தும் சத்தம் கேட்டு அங்கு வந்த கடையின் உரிமையாளர் புண்ணியவேல் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். இந்நிலையில், யானை புண்ணியவேலை விரட்டி துரத்தியது. இதனால், அவர் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளித்தார். பிறகு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு யானையை காட்டுக்குள் விரட்டினர். யானையானது கடையை சேதப்படுத்தும் காட்சியானது அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி-யில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.