அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி:
‘இடைத்தேர்தலில், அ.தி.மு.க., நிற்கிறது. எனவே நாங்கள் நிற்கிறோம்’ என, தி.மு.க., களத்திற்கு வர வேண்டியது தானே. வராததற்கு காரணம், தோல்வி அடைந்தால், ‘காங்கிரஸ் தான் தோற்றது’ எனக் கூறி தப்பித்து விடலாம் என்பதால் தான்.
அதே மாதிரி, இடைத்தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்தால், ‘ஆளுங்கட்சி அராஜகத்தால் தான் ஜெயித்தது’ என, நீங்களும் சொல்லக் கூடாது!
காங்கிரசைச் சேர்ந்த, முன்னாள்மத்திய அமைச்சர் சிதம்பரம்பேச்சு:
உக்ரைன் போர் மூலம், கச்சா எண்ணெய் விலை உயர்வால், அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கநிலை குறித்து, எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. உலக நாடுகளின் வர்த்தகம் சுருங்கி வருவதாக, பல நாடுகளின் நிதியமைச்சர்கள் பேசி வருகின்றனர். ஆனால், நம் நாட்டின் மத்திய நிதியமைச்சர் மட்டும் நேர்மறையாக பேசி வருகிறார்.
பா.ஜ., தலைமையில் மத்திய அரசு அமைந்த காலம் முதல், ‘பொருளாதார பாதிப்பு வரப் போகுது’ன்னு சொல்லிட்டே இருக்கீங்களே… அப்படி ஏதும் நடக்கலையேன்னு, வருத்தப்படுறீங்களோ?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
டி.என்.பி.எஸ்.சி., நடத்திய ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்பு பணிகளுக்கான எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஆகிய நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்து பல மாதங்கள்கடந்து விட்டன. ஆனாலும், தேர்வு செய்யப்பட்ட 195 பேருக்கு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் பணி நியமன ஆணைகள் வழங்கப்படவில்லை. இந்த தேவையற்ற தாமதம், பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சுத்திவளைச்சு சொல்லாம, ஆளுங்கட்சியினர் வசூல் வேட்டைக்காக, பணி நியமனத்தை தாமதப்படுத்துறாங்களோன்னு கேட்க வேண்டியது தானே!
அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி அறிக்கை:
தி.மு.க., ஆட்சியில், பல்வேறு வகையில் ஊழல்கள், அராஜகங்கள், வன்முறை செயல்கள், தொடர்ந்து நடந்து வருகின்றன. இதற்கெல்லாம் முடிவு கட்டும் காலம், வெகு விரைவில் வரும்.
முதலில் ஈரோடு இடைத்தேர்தலில் ஜெயிக்கிற வழியை பாருங்க… வீரவசனம் எல்லாம் அப்புறம் பேசலாம்!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதிஅறிக்கை:
தேசிய கல்விக் கொள்கையில், தாய்மொழிக்கே, பா.ஜ., அதிக முன்னுரிமை அளித்துள்ளது. அதை, தி.மு.க., எதிர்க்கிறது. தமிழ் மொழி இந்தியா முழுதும் பரவி விடக்கூடாது என, தி.மு.க., நினைக்கிறது. தி.மு.க.,வுக்கு, தமிழ் மொழியை விட காங்கிரஸ் கூட்டணி தான் முக்கியம்என்ற குறுகிய நோக்கம் உள்ளது.
திராவிட கட்சியினர், ‘தமிழர்கள் ஹிந்தியை கற்றுக் கொள்ளவே கூடாது’ன்னு தடுக்குறாங்க… தேசிய கட்சியினரோ, ‘ஹிந்தி படிச்சே ஆகணும்’னு கட்டாயப்படுத்துறாங்க… இரண்டுக்கும் நடுவுல, மக்களோட விருப்பம்னு ஒண்ணு இருக்கு; அதை பற்றி யோசியுங்களேன்!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்