டெல்லி: ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடு உள்ளதாக தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் புகார் அளித்துள்ளார். டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த பின் பழனிசாமி தரப்பை சேர்ந்த சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக புகாரளித்தோம். ஈரோடு கிழக்கு தொகுதி முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையத்தில் விரிவாக தெரிவித்தோம். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள 30,056 பேர் அந்த முகவரியில் குடியிருக்கவில்லை.
வாக்காளர் பட்டியலில் உள்ள சுமார் 40 ஆயிரம் பேர் அந்த தொகுதியில் வசிக்கவில்லை. காலமாகிவிட்ட 7,947 பேரின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் 1,009 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. சுமார் 8 ஆயிரம் பேரின் பெயர்கள் 2 முறை வாக்காளர் பட்டியலில் உள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஒரே முகவரியில் இல்லாமல் வெவ்வேறு முகவரிகளில் உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களில் 20 சதவீதம் வாக்காளர்கள் விஷயத்தில் பிரச்சனை உள்ளது. வாக்காளர் பட்டியலை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். ஏற்கனவே புகார் அளித்தும் இதுவரை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முறையாக செயல்படவில்லை என்று கூறினார்.