ஈரோடு: “கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்கள் நிறைந்த தொகுதி ஈரோடு கிழக்கு. இவர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்கி, பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்பதற்காக, இலவச வேட்டி – சேலை விநியோக திட்டத்தை எம்ஜிஆர் கொண்டு வந்தார். திமுக ஆட்சியில் இலவச வேட்டி சேலை உற்பத்திப் பணிகள், ஈரோடு மாவட்ட நெசவாளர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால், விசைத்தறிகள் நலிவடைந்து, மூடப்பட்டு, எடைக்கு போடும் அவலம் ஏற்பட்டுள்ளது. விசைத்தறி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். நாங்கள் பிரச்சாரத்திற்கு செல்லும்போது, எங்கள் வாழ்க்கையை திமுக அரசு சீரழிந்துவிட்டது என கண்ணீர் மல்க சொல்கின்றனர்.”
– ஈரோட்டில் நடந்த அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்த குற்றச்சாட்டு இது. எதிர்க்கட்சித் தலைவரின் இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளை 8 அமைச்சர்கள் சந்தித்துப் பேசி கோரிக்கைகளை கேட்டுப் பெற்றதும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசன், விசைத்தறியாளர்களை சந்தித்து பேசிய நிகழ்வும் நடந்துள்ளது. ஆக… ஈரோடு கிழக்கில் விசைத்தறியாளர்களின் வாக்குகள் முக்கியத்துவம் பெற்றுள்ளதை இந்த சந்திப்புகள் உணர்த்துகின்றன.
அண்ணாமலையின் குற்றச்சாட்டு: தங்கள் தொழிலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விசைத்தறியாளர்கள் கூறியது: “ஈரோடு மாவட்டத்தில் 50,000 விசைத்தறிகள் இயங்குகின்றன. ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் விசைத்தறியைச் சார்ந்து 30,000-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை மற்றும் சீருடை உற்பத்தி பணிகளை நம்பியே ஈரோடு விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரம் உள்ளது.
பொதுவாக, இலவச – வேட்டி சேலை உற்பத்திக்கான பணிகள் ஆண்டுதோறும் ஜூன் மாதம் விசைத்தறியாளர்களுக்கு வழங்கப்படும். ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் அரசாணை வெளியானது. ‘வெளிமாநிலங்களில் இருந்து வேட்டி சேலைகளை வாங்கி விநியோகம் செய்து கமிஷன் பெறுவதற்காக, இந்த தாமதம் நடக்கிறது’ என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஈரோட்டில் குற்றம்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுக்குப் பின்பே, இலவச வேட்டி – சேலைக்கான அரசாணை வெளியானது.
தரமில்லாத நூல் விநியோகம்: அடுத்ததாக தரமில்லாத பஞ்சினால் உற்பத்தி செய்யப்பட்ட நூலினை வழங்கியதால், வேட்டி, சேலை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், பொங்கலின்போது இலவச வேட்டி, சேலைகள் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழக அரசின் மின்கட்டண உயர்வு அமைந்தது. விசைத்தறிகளுக்கு 34 சதவீத கட்டண உயர்வு (யூனிட்டிற்கு ரூ 1.40) அறிவிக்கப்பட்டது. இதனைக் குறைத்தால் மட்டுமே மின் கட்டணம் செலுத்துவோம் எனக் கூறி கடந்த செப்டம்பர் மாதம் முதல் மின் கட்டணம் செலுத்தாமல் எதிர்ப்பை தெரிவித்து வருகிறோம்.
நிலுவைத் தொகையால் பாதிப்பு: இலவச வேட்டி சேலை உற்பத்தி செய்த வகையில், ஈரோடு மாவட்ட விசைத்தறியாளர்களுக்கு தற்போது வரை ரூ 31 கோடி வரை நிலுவைத் தொகை உள்ளது. சீருடை உற்பத்தி செய்த பணிக்காக, ரூ 20 கோடியும் நிலுவையில் உள்ளது. இவை தவிர சொத்து வரி உயர்வால் பாதிப்பு மற்றும் தொழில் சார்ந்த பிரச்சினைகள் பலவும் விசைத்தறித் தொழிலை கடுமையாக பாதித்து வருகின்றன” என்றனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பால், நீண்ட நாட்களாக தொடரும் விசைத்தறியாளர்களின் பிரச்சினைகள் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு வந்துள்ளதோடு, அதற்கான தீர்வுகள் குறித்தும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரின் வாக்குறுதி: கடந்த மாதம் 31-ம் தேதி, விசைத்தறியாளர்களை சந்தித்த மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “விசைத்தறிக்கான மின் கட்டண உயர்வு யூனிட்டுக்கு ரூ 1.40-ல் இருந்து 70 பைசாவாக குறைக்கப்படும். இலவச மின்சார அளவு 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட்டாக உயர்த்தப்படும். இடைத்தேர்தல் முடிந்ததும் இந்த இரு உத்தரவுகளும் அமலாகும்” என வாக்குறுதி அளித்துள்ளார்.
சபரீசனின் சந்திப்பு: ஈரோட்டில் கடந்த 9-ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசன், விசைத்தறியாளர்களைச் சந்தித்து பேசி, அவர்களது கோரிக்கைகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக, கடந்த 10-ம் தேதி முத்துசாமி, எ.வ.வேலு, காந்தி உள்ளிட்ட 8 அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் விசைத்தறியாளர்களைச் சந்தித்து பல்வேறு உறுதிமொழிகளை அளித்துள்ளனர்.
இதில், விசைத்தறியாளர்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையில், ரூ.99 கோடியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் நெசவாளர்களுக்கு சேர வேண்டிய ரூ.60 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சீருடை உற்பத்தி முழுமையாக விசைத்தறியாளர்களுக்கு வழங்கப்படும் என்ற உறுதியும் அமைச்சர்களால் அளிக்கப்பட்டுள்ளது.
ஜவுளித் தொழிலை சார்ந்த சாயப்பட்டறை, பதப்படுத்துதல் போன்ற தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்குதல், கடன் வழங்குதல், கிளஸ்டர் ஏற்படுத்த நிலம், மஞ்சப்பை தயாரிப்பு என பல கோரிக்கைகள் விசைத்தறியாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதியில், விசைத்தறியாளர்களின் வாக்குகளை வளைக்க முதல்வரின் மருமகன் சபரீசனின் வகுத்த ‘வியூகம்’ வாக்குகளாக மாறுமா அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பலன் கிடைக்குமா என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்.