சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக நிச்சயம் வெற்றி பெறும் என்று கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், கட்சியின் கொடி நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சிக் கொடியேற்றி வைத்து, நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேமுதிகவின் 23-ம் ஆண்டு கொடி நாள் விழா தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியில், வார்டுக்கு ஒரு அமைச்சர் நியமிக்கப்படுகிறார். தமிழக முதல்வரே அங்கு முகாமிட்டு, பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தமிழகத்தின் சாபகேடு. இந்நிலை மாற வேண்டும்.
பல இடைத்தேர்தல்களில் தேமுதிக தனியாக களம் கண்டுள்ளது. எனவே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் தேமுதிக நிச்சயம் வெற்றி பெறும் ஈரோடு கிழக்குத் தொகுதி உருவாக்கப்பட்டவுடன், 2011-ல் அங்கு நடைபெற்ற தேர்தலில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது முரசு சின்னம்தான். மேலும், விஜயகாந்த் நடிகராக இருந்தபோதே, அந்த தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.
பிரதமர் வாக்குறுதியளித்தபடி தலா ரூ.15 லட்சம் பணம் வழங்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால், ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளே இன்றும் நிறைவேற்றப்படவில்லை. 85 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக அவர் கூறுகிறார். ஆனால், ஓரிரு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழகத்தை வடமாநிலத்தவர் ஆக்கிரமித்து வருகின்றனர். எனில், தமிழக இளைஞர்களுக்கு எப்படி வேலைவாய்ப்பு கிடைக்கும்? இதுபோன்ற விஷயங்களில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்.
ஈரோடு தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும். மற்ற கூட்டணிகளில் நிறைய குழப்பங்கள் இருந்ததால், நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் கொடியேற்றி வைத்த பிரேமலதா விஜயகாந்த், பொதுமக்களுக்கு இலவச சேலைகளை வழங்கினார்.