கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஏரோ இந்தியா 2023 விமானக் கண்காட்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
யெலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்தில் நடைபெற்று வரும் 14-வது ஏரோ இந்தியா விமானக் கண்காட்சியில், போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்திக் காட்டி வருகின்றன.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, புதிய இந்தியாவின் திறனுக்கு பெங்களூருவின் வானம் சாட்சியாகி வருவதாக தெரிவித்தார்.
ஆசியாவின் மிகப்பெரிய விமானக் கண்காட்சியான இந்நிகழ்ச்சி இன்று முதல் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுதாரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
32 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், 29 நாடுகளின் விமானத் தளபதிகள் இதில் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. வரும் காலங்களில் இந்திய விமான நிறுவனங்கள் 1,500 முதல் 1,700 விமானங்களை வாங்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில், ஏர்பஸ் எஸ்.இ மற்றும் போயிங் கோ நிறுவனங்களிடமிருந்து 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள 500 ஜெட் விமானங்கள் வரை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ஏர் இந்தியா அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.