துபாய்,
ஐ.எல்.டி20 லீக்கின் முதல் சீசன் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கல்ப் ஜெயண்ட்ஸ் மற்றும் டெசர்ட் வைபர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கல்ப் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய டெசர்ட் வைபர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் ஹசரங்கா 55 ரன், பில்லிங்ஸ் 31 ரன் எடுத்தனர்.
147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கல்ப் ஜெயண்ட்ஸ் அணி ஆடியது. அந்த அணி 18.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து முதல் சீசனிலே சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரராக களம் கண்ட கிறிஸ் லின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 50 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தார். மறுபுறம் எராஸ்மஸ் 30 ரன்களும், ஹெட்மயர் 13 பந்துகளில் 25 ரன்களும் எடுத்திருந்தனர்.
ஐ.எல்.டி20 லீக்கின் முதல் சீசனில் அபுதாபி நைட் ரைடர்ஸ், துபாய் கேபிடல்ஸ், எம்.ஐ எமிரேட்ஸ், ஷார்ஜா வாரியர்ஸ், கல்ப் ஜெயண்ட்ஸ், டெசர்ட் வைபர்ஸ் என ஆறு அணிகள் பங்கேற்றன. கொல்கத்தா, டெல்லி, மும்பை போன்ற ஐபிஎல் அணிகள் இதில் அணிகளை வாங்கி இருந்தன. ரவுண்ட் ராபின் மற்றும் பிளே-ஆப் என முதல் சீசன் நடைபெற்றது. இதில் சாம்பியன் பட்டத்தை கல்ப் ஜெயண்ட்ஸ் வென்றது குறிப்பிடத்தக்கது.