கடற்கரையில் பட்டப்பகலில் மது அருந்தும் இளைஞர்கள்

புதுச்சேரி :  புதுச்சேரி மாநிலம் சுற்றுலா தலத்தில் சிறந்து விளங்குவதால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று புதுவைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து அனைத்து சுற்றுலா தலங்களும் கூட்டமாக காணப்பட்டது. இந்நிலையில் வெளியூர் பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் புதுவையில் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் அருகே உள்ள கோட்டக்குப்பம், பெரிய முதலியார்சாவடி ஆகிய தமிழக பகுதிகளில் கடற்கரையோரங்களில் அறை வாடகை எடுத்து தங்கியுள்ளனர். வார விடுமுறை நாட்களில் தமிழகத்திலிருந்து புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் மது அருந்தவே வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் மதுக்கடையில் மது அருந்தாமல் ஆங்காங்கே பொது இடங்களில் மது அருந்திவிட்டு செல்கின்றனர். அதன்படி பெரிய முதலியார்சாவடி கடற்கரையில் பட்டப்பகலில் இளைஞர்கள் பொது இடங்களில் மது அருந்தி வருவதால் மற்ற சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. மேலும் அவர்கள் மதுபாட்டில்களை உடைத்து கடற்கரை மணலில் போட்டு விடுகின்றனர்.

இதனால் அந்த மணல் பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் காலில் பாட்டில் கிழித்து ரத்தக்காயம் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அங்கு கடற்கரைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இவர்கள் மதுபோதையில் கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே கோட்டக்குப்பம் போலீசார் கடற்கரை பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். கடற்கரையில் பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.