யுனான்: சீனாவை சேர்ந்த ஒருவரின் திருமணத்தின்போது அவரின் முன்னாள் காதலிகள் ஒன்றுதிரண்டு கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இளமைகாலத்தில் காதலிகளை காயப்படுத்தியதற்கு மன்னிப்பு கோரினார் அந்த காதலன்.
உலகம் முழுவதும் காதலர் தினம் நாளை (பிப்.,14) கொண்டாடப்படும் சூழலில், கடந்த ஒரு வாரமாக காதலர்கள் சாக்லேட் தினம், கட்டிப்பிடி தினம், முத்த தினம் என ஒவ்வொரு நாளும் கொண்டாடி வருகின்றனர். அப்படி இருக்கையில் சீனாவில் ஒருவரின் திருமணத்தின்போது அவரின் முன்னாள் காதலிகள் ஒன்றுசேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த ‘காதல் மன்னன்’ அதிர்ச்சியடைந்தார்.
தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் சென். இவருக்கு கடந்த பிப்ரவரி 6ம் தேதி திருமணம் நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற திருமணத்தின்போது திடீரென சென்னின் முன்னாள் காதலிகள் சிலர் மண்டபத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கையில் பேனர் ஒன்றையும் வைத்திருந்தனர். காதலிகள் அனைவரும், ‘பெண்களை ஏமாற்றாதீர்கள். அவர்களிடம் நேர்மையாக இருங்கள். எதிர்காலத்தில் அவர்கள் பழிவாங்க முடிவு செய்தால், உங்கள் நிலமை என்னாகும்’ என கோஷங்கள் எழுப்பினர்.
இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற சென், முன்னாள் காதலிகளிடம் மன்னிப்பு கோரினார். இது குறித்து சென் கூறுகையில், ‘இது என்னை மிகவும் சங்கடப்படுத்தியுள்ளது. இப்போது என் புதுமண மனைவியும் என்னுடன் சண்டையிடுகிறார். கடந்த காலங்களில் நான் ஒரு கெட்ட காதலனாக இருந்துள்ளேன். இளமை காலத்தில் முதிர்ச்சியில்லாமல் பல பெண்களை காயப்படுத்தியுள்ளேன். உங்கள் காதலியை ஏமாற்றுவதை விட நீங்கள் உண்மையாக இருங்கள்’ என தன் தவறை ஒப்புக்கொண்டதுடன் அறிவுரையும் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement