வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய கான்சாபுரம் அத்திக்கோயில் பகுதியில் மலைவாழ் மக்கள் குடியிருப்பு உள்ளது. இந்தப் பகுதியில் கலெக்டர் ஜெயசீலன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம், ‘குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுகிறீர்களா, பிரசவம் எங்கு பார்க்கிறீர்கள், குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்கிறார்களா, குழந்தை திருமணம் செய்யக் கூடாது என்றார். பின்னர் அப்பகுதியில் அங்கன்வாடி மையம் ஏற்படுத்தி, குழந்தைகள் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது மலைவாழ் மக்கள், ‘இடிந்த வீடுகளை கட்டித் தரவேண்டும். செல்போன் டவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு ஏற்பாடு செய்வதாக கலெக்டர் தெரிவித்தார்.
இதேபோல தாணிப்பாறை ராம்நகரில் உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பில் கலெக்டர் ஆய்வு செய்தார். அங்குள்ள மழைவாழ் மக்கள், ‘சுந்தரமகாலிங்கம் கோயில் விழா நாட்களில் கடைகள் வைப்பதற்கு அனுமதிக்க வேண்டும். பால் கறவை மாடுகள் வழங்க வேண்டும். மலையில் சேகரம் செய்யும் பொருட்களை பொடி செய்து விற்க ஏற்பாடு செய்ய வேண்டும். 15 வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும்.
15 வீடுகள் கூடுதலாக கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு கலெக்டர் ஆவண செய்வதாக தெரிவித்தார். இதேபோல, ஜெயந்த் நகர் மலைவாழ் குடியிருப்பு, பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகள் மற்றும் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஜெயசீலன் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது கலெக்டருடன் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாவட்ட அலுவலர் வித்யா, தாசில்தார் உமா மகேஸ்வரி, ஆதிதிராவிடர் தாசில்தார் முத்துமாரி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜெய்சங்கர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராமராஜ், கான்சாபுரம் ஊராட்சி தலைவர் சரஸ்வதி, மண்டல துணை வட்டாட்சியர் காளிராஜ், வருவாய் ஆய்வாளர் குமரேசன், ராம்கோ நிறுவன மலைவாழ் இன மக்கள் சேவை பிரிவு மேலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.