கோவை: கோவையில் மாநகராட்சி சார்பில் மேம்பால தூண் ஒன்றில் வரையப்பட்டிருந்த கண்ணகி ஓவியத்தை கருப்பு மை ஊற்றி அழித்தவரை போலீசார் கைது செய்தனர். கோவை மாநகராட்சி சார்பில் மேம்பாலங்களில் உள்ள தூண்களில் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை, குண்டலகேசி, மணிமேகலை, வளையாபதி ஆகிய ஐம்பெரும் காப்பியங்கள் சம்மந்தப்பட்ட காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
பொற்கொல்லர்களின் வேலைப்பாடுகளும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் சார்ந்த தொழிலை அதில் இழிவுபடுத்தப் பட்டிருப்பதாக குற்றம்சாட்டி விசுவஞ்சன முன்னேற்ற கழக நிறுவனர் வேல்முருகன் என்பவர் கருப்பு மை ஊற்றி கண்ணகி ஓவியத்தை அழித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து வேல்முருகனை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.