கோவை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பின்புறம் பல்வேறு கடைகள், வழக்கறிஞர்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இன்று திங்கள் கிழமை என்பதால் நீதிமன்ற வளாகம் பரபரப்பாக இயங்கத் தொடங்கியது.
இந்த நிலையில், காலை அங்கு ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென்று இரண்டு இளைஞர்களை அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரி தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறது.
இதில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிரிழந்தார். மற்றொரு இளைஞருக்கு தலை, கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ், காவல் துறையினருக்கும் தகவல் அளித்திருக்கின்றனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் சிகிச்சைக்காக இருவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றது. போலீஸாரும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
உயிரிழந்தவர் கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த கோகுல் (25) என்றும், காயமடைந்தவர் சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (27) என்றும் தெரியவந்திருக்கிறது. இருவரும் நீதிமன்ற விசாரணைக்காக அங்கு வந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த கோகுல் தன் உடலில் ஒரு கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்திருக்கிறது.
பட்டப் பகலில், மக்கள் முன்னிலையில் இரண்டு இளைஞர்களை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து 5 தனிப்படை போலீஸ் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.