தெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி அரசு முறைப் பயணமாக சீனாவுக்கு செல்ல இருக்கிறார். அதன்படி பிப்ரவரி 14 முதல் 16 வரை இப்ராஹிம் ரெய்சி சீனாவிற்கு வருகை தரவுள்ளதாக சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீன துணை அதிபர் ஹு ஹுன்ஹுவா ஈரானுக்கு வருகை புரிந்தார். அப்பயணத்தில் மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த பயணத்தைத் தொடர்ந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் ஈரான் அதிபர் ரெய்சிக்கு தங்கள் நாட்டில் சுற்றுபயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். இந்தச் சூழலில்தான் தற்போது ரெய்சி ஈரானுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ரெய்சியின் சீன பயணம் குறித்து கூடுதல் தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
அமெரிக்காவால் கடுமையான பொருளாதாரத் தடை உள்ளான ஈரானுக்கு சீனாதான் தற்போது முதன்மையான நட்பு நாடாக இருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையேயும் வர்த்தகமும் வளர்ந்துள்ளது. இந்த நிலையில் ரெய்சியின் சீன பயணம் முக்கியதுவம் வாய்ந்தது.
கடந்த ஆண்டு, இரு நாடுகளும் பாரசீக வளைகுடா பகுதியில் பில்லியன் டாலர் மதிப்பில் முதலீட்டை செயல்படுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டன. மேலும், இந்த நடவடிக்கைகள் எண்ணெய் வளம் நிறைந்த பிராந்தியத்தில் சீனாவின் மதிப்பை உயர்த்துவதற்கான முயற்சியாக பார்க்கப்பட்டது.
இதற்கிடையில் ரஷ்யாவுடனும் தனது நட்பை ஈரான் வளர்த்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈரான் தான் ஆயுதங்கள், ட்ரோன்களை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இதனை முதலில் மறுத்த ஈரான் பின்னர் ஒப்புக் கொண்டது.