செத்தல் மிளகாய் உற்பத்தியை 25 சதத்தினால் அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய பிரிவின் நவீன திட்டத்தின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பதுளை மாவட்டத்தில் மிளகாய் செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கும்பல்வெல பிரதேசத்தில் மிளகாய் செய்கையை அமைச்சர் பார்வையிட்டுள்ளார்.
அண்மையில், உமாஓயா திட்ட நிர்மாணப் பணி காரணமாக ஏற்பட்ட நீர்க்கசிவு காரணமாக பண்டாரவளை கும்பல்வெல மக்கள் பெருமளவான பாதிக்கப்பட்டனர். குறிப்பாக நெல் மற்றும் காய்கறி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உற்பத்தி பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மிளகாய் செய்கைத் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது.
வெளிநாட்டு நிதியில் செயல்படுத்தப்படும் விவசாயப் பிரிவு நவீனமயமாக்கல் திட்டம், விவசாயிகளுக்கு தேவையான விதை, சொட்டு நீர்ப்பாசன தொழில்நுட்பம் மற்றும் பயிர்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நவீன தொழில்நுட்ப உபகரணங்களை இலவசமாக வழங்கியுள்ளது.
ஒரு ஏக்கரில் பயிரிடப்படும் மிளகாய்ச் செடிகளை, அரை ஏக்கரில் பயிரிட்டு, அதிக அறுவடை செய்வதற்கான பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது பதுளை மாவட்டத்தில் 300 விவசாயிகள், 150 ஏக்கர் நிலப்பரப்பில்; மிளகாய் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு விவசாயிக்கு பத்து லட்சம் ரூபா திருப்பிச் செலுத்தப்படாத உதவியாக வழங்கப்பட்டுள்ளது.