கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலைச் சேர்ந்த மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன், பா.ஜ.க.வின் மாநிலத் தலைவராக கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன், கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பை ஏற்றார்.
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இல.கணேசன், பா.ஜ.க.வின் தேசிய செயலாளராகவும், துணைத் தலைவராகவும் இருந்தவர். தொடர்ந்து, பா.ஜ.க.வின் மாநிலத் தலைவராகப் பதவி வகித்தார். மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இல.கணேசன், கடந்த 2021-ம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் தற்போது நாகலாந்து மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க.வின் மாநில தலைவராகப் பதவி வகித்துள்ளார். கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினராகவும், அகில இந்திய தென்னை நார் வாரியத் தலைவராகவும் இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன், இரண்டு முறை கோவை மக்களவைத் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தேர்வானவர். தற்போது ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகநாதன், பா.ஜ.க.வில் பல்வேறு பதவிகளை வகித்து, கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் மேகாலயா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர், மணிப்பூர் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பை வகித்தார்.