மேயாத மான், ஆடை போன்ற திரைப்படங்களை இயக்கியவர் ரத்னகுமார். இவரது இயக்கத்தில் நடிகர் சத்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான திரைப்படம் ‘குலு குலு’.
இத்திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனில் எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் ‘இந்தியப் பிரதமர்’ என்று குறிப்பிடும் காட்சி நீக்கப்பட்டிருந்தது. இதேபோல், பாலிவுட்டில் ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படத்திலும் ‘இந்தியப் பிரதமர்’ என்று குறிப்பிடும் காட்சிகள் நீக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு படங்களுக்கு மட்டுமல்ல அண்மைக் காலமாக வெளியானத் திரைப்படங்களின் பல காட்சிகள் எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படாமல் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால் நீக்கப்பட்டு வருகிறது என்று திரைப்பட இயக்குநர்கள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு, சினிமா மற்றும் யூடியூப் போன்ற பொழுதுபோக்குச் சார்ந்த துறைகளிலும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குநர் ரத்னகுமார் திரைப்பட சென்சார் குறித்தும் மத்திய அரசு குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரத்னகுமார், “திரைப்பட சென்சாரில் தன்னிச்சையாக காட்சிகளை நீக்குவது நியாயமற்றது. ‘குலுகுலு’ படத்திற்கு இது நடந்தது என்பதால் மட்டும் இதை நான் சொல்லவில்லை. ஜனநாயகத்தின் முக்கியமானத் தூண் கலை. அதன் மீது இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்கிறீர்கள். தமிழ்நாட்டை, தமிழகம் என மாற்ற முயல்வதற்கு பதில், இந்தியாவை United States of India என பெயர் மாற்றம் செய்துவிடுங்கள்; நன்றி!” என்று பதிவிட்டிருக்கிறார்.