தமிழ் மொழிக்கான மத்தியப் பல்கலை. அமைக்க மக்களவையில் ரவிக்குமார் எம்.பி கோரிக்கை

புதுடெல்லி: தமிழ் மொழிக்கான மத்தியப் பல்கலைகழகம் அமைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.ரவிக்குமார் இன்று மக்களவையில் கோரிக்கை வைத்தார்.

மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாகத் தமிழ் மொழிக்கென மத்திய பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதை விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியைச் சேர்நத எம்.பியான டி.ரவிகுமார், மக்களவையில் பட்ஜெட் மீதான தனது எழுத்துபூர்வ உரையில் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து விழுப்புரம் தொகுதி எம்.பி.யான டி.ரவிகுமார் தன் எழுத்துபூர்வ உரையில் குறிப்பிட்டிருப்பதாவது: ”இந்த பட்ஜெட்டில் சிறுபான்மை சமூகத்தினருக்கு இழைக்கப்பட்டிருக்கும் பாகுபாடுகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். அவர்களுக்கு நியாயமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

எனது விழுப்புரம் தொகுதியில் உள்ள ரயில்வே பள்ளியை கேந்திரிய வித்யாலயா பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏகலவ்யா மாதிரி பள்ளிகள் போன்று எஸ்சி பிரிவினருக்கு சிறப்புப் பள்ளிகள் அமைக்க வேண்டும். எஸ்சிஎஸ்பி மற்றும் டிஎஸ்பியை முறையாக செயல்படுத்த மத்திய சட்டம் இயற்றப்பட வேண்டும்.

மத்திய அரசு சம்ஸ்கிருத மொழிக்காக நான்கு பல்கலைக்கழகங்களை நிறுவியுள்ளது. 2023ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி மறைந்த தமிழக முதலமைச்சரும், சிறந்த தமிழறிஞருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஆரம்பமாகிறது. அவரை கவுரவிக்கும் வகையில், தமிழகத்தில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக மத்திய பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.