“தீண்டாமைக்கு அடிப்படையே ஆர்எஸ்எஸ், பாஜகதான்” – ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கே.எஸ்.அழகிரி பதில்

சென்னை: “எந்தக் காலத்தில் தமிழகத்தில் முற்போக்கு கட்சிகள் தீண்டமையை ஆதரித்திருக்கிறார்கள்? தீண்டாமையை என்றைக்கு நியாயப்படுத்தி இருக்கிறார்கள்? தீண்டாமைக்கு எதிராக இந்த அரசும், எங்களுடைய கூட்டணியும், காவல் துறையும் இருக்கிறது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமை இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், “அரசியல் கருத்துகளை பிரதமர் மோடி கூறட்டும், நட்டா கூறட்டும், அண்ணாமலை கூறட்டும். அதற்கு பதிலளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், ஓர் ஆளுநர் எப்படி கூறலாம். ஆளுநர் தங்களது மரபுகளைத் தாண்டி கருத்துகளை கூறுகிறார். எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்கிறார். அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

இந்தியாவில் தீண்டாமை இருக்கிறது. தீண்டாமை என்பது எல்லா கிராமங்களிலும் இருக்கிறது. ஆனால், அந்த தீண்டாமையை ஒழிப்பதற்காக அறவே அகற்றுவதற்காக நாம் எடுத்திருக்கின்ற முயற்சிகள்தான் இதில் முக்கியம். இங்கு தீண்டாமை ஒரு குற்றம் என்று சட்டத்தில் மட்டும் சொல்லவில்லை. மகாத்மா காந்தி உளப்பூர்வமாக சொன்னார். அதற்காக நாம் தியாகம் செய்திருக்கிறோம். ஏராளமான போராட்டங்களையும், வன்முறைகளையும் சந்தித்திருக்கிறோம்.

எந்தக் காலத்தில் தமிழகத்தில் முற்போக்கு கட்சிகள் தீண்டமையை ஆதரித்திருக்கிறார்கள். தீண்டாமையை என்றைக்கு நியாயப்படுத்தியிருக்கிறார்கள். தீண்டாமைக்கு எதிராக இந்த அரசும், எங்களுடைய கூட்டணியும், காவல் துறையும் இருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக குற்றங்கள் நடைபெறுகிறது. நாம் இல்லையென்று சொல்லவில்லை. அதை மூடி மறைக்கவும் இல்லை. ஆனால், ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். உத்தரப் பிரதேசம் எப்படி இருக்கிறது? பாஜக ஆளும் பிற மாநிலங்கள் எப்படி இருக்கின்றன? தமிழகம் எப்படி இருக்கிறது?

தமிழகத்தின் முதலாவது முதலமைச்சரில் இருந்து இன்றைக்கு இருக்கின்ற முதலமைச்சர் வரை தீண்டாமைக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு நாம் செயல்பட்டிருக்கிறோம். வேறு வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முதல்வர்களாக இருந்துள்ளனர். ஆனால், இதை குற்றம் சொல்ல பாஜக யார்? ஆர்எஸ்எஸ் யார்? தீண்டாமைக்கு அடிப்படை அவர்கள்தான். தீண்டாமையை கட்டி வளர்ப்பவர்களும், நியாயப்படுத்துபவர்களும் அவர்கள்தான்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி குறித்து 2 நூல்களின் தமிழ் பதிப்புகள் வெளியீட்டு விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தர் அரங்கில் நேற்று நடந்தது. இந்த நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழகத்தில் சமூகநீதி பற்றி பரவலாக பேசுகிறோம். ஆனால், குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது, கோயிலுக்குள் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பது, அங்கன்வாடியில் தரையில் அமர வைப்பது போன்ற நிகழ்வுகள் இங்கு தொடர்ந்து நடக்கின்றன. அமைதி நிலவும் சமுதாயத்தை பிளவுபடுத்த சிலர் முயற்சிக்கின்றனர். அதை சரிசெய்ய வேண்டும்” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.